சமர்ப்பணம்-2
முதல் சமர்ப்பணம் இங்கு http://vsanthamullai.blogspot.in/
யாரையும் சோகப்படுத்தணும்னு இதை எழுதலை. பிரிந்து 1 மாதம் ஆகியும், இன்னும் இங்கேயே இருக்கிற உணர்வை கொடுத்துக் கொண்டு, நம்பமுடியாத அதிசயமாய் வாழ்ந்த அஷ்வத்தின் அம்மா, அப்பாக்கு இதை படிப்பதால் நிறைவு ஏற்படுகிறது. அவர்களுக்கு சமர்ப்பணம் இது.
குறும்புக்கார குழந்தையாய் எல்லோரையும் கவர்ந்தவனை, கேன்சர் எப்படி அப்படி பொறுப்பான பிள்ளையாய் மாற்றியதோ?
அவனுக்கு முதன் முதலில் வலி தீவிரமாக ஆரம்பித்தது, அவனின் உபநயனத்தன்று. ஏதோ கால் குடைச்சல் வலி என்றே அனைவரும் நம்பிக்கொண்டு மெத்தனமாக இருந்து விட்டோம். இன்று வீடியோவில் அவன் முகத்தைப் பார்த்தால் தெரிகிறது அவன் பட்ட அவஸ்தை.
ஸ்மார்ட் போன் வைத்திருக்கிற 18 வயசு பையனுக்கு internet உபயத்தில் நன்றாக தெரியும் தன் நோயைப் பற்றியும், அதன் தீவிரம் பற்றியும். இருந்தாலும், ஒரு நாள் கூட சிடுசிடு என்றோ, கோபம், ஆத்திரம், அழுகை எதுவும் இல்லாமல், உடம்பு வலி, மன வலி, பெற்றோர்கள் படும் அவஸ்தை, வெளியில் போக முடியாமை, விளையாட முடியாமை, அவனுக்கு மிகவும் பிடித்த சைக்கிள் விட முடியாமை....இப்படி எத்தனை கஷ்டங்களை அவன் தாங்கினான்.
ஒவ்வொரு முறையும் டாக்டரோ , நர்ஸோ மருந்து கொடுத்தாலோ அல்லது ஊசி போட்டாலோ அதன் பெயர், எதற்கு போடுகிறார்கள், அதனால் என்ன நன்மை என்று ஒவ்வொரு முறையும் கேட்டுவிட்டுத்தான் போட அனுமதிப்பான்.
சென்னை வெள்ளத்தின் போது அவனுக்கு க்ளைமேட்டால் வீசிங் - மூச்சுத் திணறல் அதிகரித்து விட்டது. இருந்தாலும் தன் நண்பர்களுடன் சென்று உதவி செய்ய முடியவில்லையே என்று தான் கவலைப்பட்டான்.
பெற்றோர்களுக்கும் அவன் நிலைமை புரிந்தாலும், கடவுள் எதாவது அதிசயம் நிகழ்த்தி காப்பாற்றுவார் என்றே நம்பிக் கொண்டிருந்தனர். Immune அதிகரிக்க எத்தனை வித விதமான காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்புகள் கலந்து அவனுக்கு ஜூஸ் கொடுப்பார்கள். அந்த கஷ்டத்திலும் அவன் அம்மாவை கிண்டலடிப்பான் - 'சும்மா சொல்லு பட்டு, என்னென்ன போட்டு அரைச்சிருக்க இதல? நான் கண்டு பிடித்து விடுவேன் இருந்தாலும் நீயே சொல்லு' என்று.
ஒரு கோவில், ஒரு தான தர்மம், ஒரு ஹோமம் விடவில்லை அவர்கள். அத்தனை துயரத்திலும் வீடே அவ்வளவு மங்களகரமாக இருந்தது.
எத்தனை மணி ஆனாலும் அவன் வாய்க்கு பிடிப்பதை செய்து போட அம்மா, வாங்கி வர அப்பா. கடைசி கடைசில ஒரு நாள் பாதி இரவுக்கு மேல் , fanta குடிக்கணும் போலிருந்தது அவனுக்கு. இவர்கள் எங்கெங்கோ அலைந்து ரொம்ப தூரம் சென்று திறந்திருந்த கடையிலிருந்து வாங்கி வந்தார்கள். ஒரு வாய் குடித்துவிட்டு அவன் சொன்னது "அப்படியே திருப்பதி பெருமாளைப் பார்க்கிற மாதிரி இருக்கு பட்டு". பட்டுங்கறது அவன் அம்மாவை கடைசி நாட்களில் அழைத்த பெயர்.
ஒரு நாள் யாரையாவது பார்க்க ஆஸ்பத்திரி போனால் கூட , எப்படா வீட்டுக்கு போவோம்னு இருக்கு நமக்கு. ஒன்றரை வருடமா அந்த குடும்பம் பட்டதே கஷ்டம், அப்பப்பா. ஒவ்வொரு தடவை டெஸ்ட் ரிசல்டின் போதும் துளித் துளியாக துடித்தார்கள். அவர்கள் மட்டுமின்றி அத்தனை சொந்தங்களுக்கும் அதே நிலை தான்.
வட இந்தியாவில் எதாவது பரிட்சை, இன்டர்வ்யூ அல்லது ஊருக்குப் போகும் போது தயிர்+சக்கரை கொடுத்து அனுப்பி வைப்பார்கள். எங்க அஷ்வத் நாராயணனிடம் போவதற்கு முன் அவன் அம்மா கையால் லஸ்ஸி சாப்பிட்டு விட்டுப் போனான். போவதற்கு 2 நாட்கள் முன் அவன் அப்பா, அம்மாவிடம் சொன்னது - 'நாளைக்கு நான் ICU ல ஷிஃப்ட் ஆயிடுவேன். நீங்க சும்மா அழக் கூடாது' என்பதே.
பெரியாழ்வாரே, தன்னுடைய பெரியாழ்வார் திருமொழி 4ம்பத்து,10ம் திருமொழியில் 10 பாட்டிலும்,
"எய்ப்பென்னை வந்து நலியும்போதங்கேதும் நானுன்னை
நினைக்க மாட்டேன், அப்போதைக்கிப்போதே சொல்லி
வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளி யானே !"
என்று, உலக வாழ்க்கையை துறக்கும் போது கடவுளை நினைக்க முடியாது, அதனால் இப்போதே சொல்லி வைக்கிறேன், என்னை உன்னடியில் சேர்த்துக் கொள் என்கிறார்.
தேவப்பெருமாளும், 6 வார்த்தைகளில், திருக்கச்சி நம்பிகள் மூலம் இராமானுஜருக்கு சொன்னதும், அந்திம காலத்தில் கடவுளை நம்மால் நினைக்க முடியாவிட்டால் கூட அவன் நம்மை ரக்ஷிப்பான் என்பதே. வராஹப் பெருமானும் பூமி தேவிக்கு இதே உத்தரவாதம் தான் அளித்திருக்கிறார்.
ஆனால் எங்க அஷ்வத் கடைசியில் CCU வில் இருக்கும்போது, ஸ்ரீசுக்தம் மற்றும் த்வய மந்திரம் காதில் கேட்டுக்கொண்டு, பெருமாள் தீர்த்தம் -துளசி சேர்த்துக் கொண்டு, மற்றும் ஆசாரியன் தானே அவனுக்காக பண்ணிக்கொண்டு அளித்த ப்ரபத்தி-சரணாகதியின் பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு மோக்ஷம் சென்றிருக்கிறான்.
இன்னமும் பள்ளி ஆசிரியர்களிலிருந்து ,கல்லூரி HOD வரை மற்றும் அனைத்து நண்பர்களும் அவர்கள் வீட்டுக்கு வந்த வண்ணமே இருக்கின்றனர். இன்றும் அவன் தோழர்கள் முன்பு போலவே அவன் வீட்டிற்கு வந்து, அஷ்வத்தின் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிச் செல்கின்றனர். அவர்களுக்கு போன் பண்ணிக் கொண்டும் இருக்கிறார்கள்.
அவன் பிரிந்து 1 மாதத்திற்று மேலே ஆனாலும், தினமும் காலையில் பாலை ஆற்றி வைப்பது முதல் - மதியம் & இரவு உணவில் அவனுக்குப் பிடித்ததை சமைத்து அவனுக்கு படைத்துவிட்டு பிறகு உண்பது வரை அவனுடனே கழிகிறது அவர்களின் பொழுது. எங்களைப் பொருத்தவரை அவன் இங்கேயே எங்களுடன் எங்கள் மனங்களில் தான் இருக்கிறான்.
பஞ்ச தத்துவத்தால் ஆன அஷ்வத்தின் உடலை வேண்டுமானால், நம்மால் காண இயலாது. ஆனால் ஆறாவது தத்துவமான நம் மனதால் அவனை ஸ்பரிசிக்க முடியும்.
அவனுடைய Facebook Status -
'A few bad chapters does not mean that your story is over, it just means that very soon....its going to be an EPIC
NEVER. GIVE. UP !'கரெக்ட் தான். அவன் வரலாறு மற்றுமின்றி இதிகாசமாகவும் ஆகி விட்டான். அவனே அவன் பெற்றோர்களை தெய்வமாக இருந்து பார்த்துக் கொள்ளட்டும்.