ஹோலி ஹை!!
ப்ரஹலாதனைப் பற்றியும் ஹிரண்யகசிபுவைப் பற்றியும் நம் எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.நமக்கு தெரியாத ஒரு கதையை வட இந்திய புராணங்கள் சொல்கிறது.
ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதனைக் கொல்ல முயன்ற ஒவ்வொரு முறையும் நாராயணன் காப்பாற்றி விடுகிறார். அப்பொழுது ஹிரண்யகசிபுவின் சகோதரி ஹோலிகா என்பவள் தன் சகோதரனுக்கு உதவ வருகிறாள்.
அவளும் மாயாசக்தி உடைய அரக்கியே. அவள் சொக்கபானை ஒனறின் மேல் அமர்ந்து, ப்ரஹலாதனிடம் நைச்சியமாக பேசி அவளது மடியில் உட்காரும்படி செய்கிறாள்.
அவள் தன் மாயா சக்தியால் நெருப்பில் எரியாத ஒரு கம்பளிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு, சொக்கபானைக்கு நெருப்பு வைக்கச் சொல்கிறாள்.
உடனே நாராயணன் அருளால் அவள் மேல் இருந்த கம்பளி பறந்து சென்று ப்ரஹ்லாதன் மேல் மூடி அவனை பிழைக்க வைக்கிறது.
நெருப்பில் ஹோலிகா எரிந்து சாம்பலாகி விடுகிறாள். இந்த நிகழ்ச்சியே ஹோலி என்று அவள் பெயரில் கொண்டாடப்படுகிறது.
ஹோலிப் பண்டிகையின் முதல் நாள் இரவு ,அதற்காக குறிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில், பூஜை செய்து,தானங்கள் கொடுத்து, பின் நம் ஊரில் கார்த்திகைக்கு எரிக்கும் சொக்கபானை போன்று செய்து, அதில் ஹோலிகா மற்றும் ப்ரஹ்லாதனின் உருவங்களை வைத்து கொளுத்துவார்கள்.
அந்த சாம்பலை பத்திரமாக வீட்டில் வைத்திருப்பார்கள். மார்வாடிப் பெண்கள் அன்று விரதம் இருந்து ஹோலிகா எரிந்த பின் தான் சாப்பிடுவார்கள்.
இந்த நாளை, தீயதை நல்லது வென்ற நாளாக எல்லா மதத்தினரும் கொண்டாடுகிறார்கள்.
.நண்பர்களுக்குள் மனஸ்தாபம் இருந்தால் கூட ஹோலியன்று ஒருவருக்கு ஒருவர் குலால் பூசி சமரசமாகி விடுகின்றனர்.
இனிப்பும், காரமும் நம் தீபாவளியை மிஞ்சும் அளவுக்கு செய்வார்கள்
இப்படியாக் கொண்டாடப் பட்ட ஹோலி இன்று சமூக விரோதி இளைஞர்களால், வெறும் தடையின்றி குடிப்பதற்காகவும், மற்ற வீட்டுப் பெண்களை எதிர்ப்பின்றி தொட்டு வண்ணம் பூசுவதற்காகவுமே கொண்டாடப் படுகிறது.
20 வருடம் முன்பு பெண்களும் தெருக்களில் ஒருவர் மீது ஒருவர் வண்ணம் பூசி சந்தோஷமாக கொண்டாடினார்கள். இப்போது எந்தப் பெண்ணும் ஹோலியன்று தனியாக வெளி வேலைக்குக் கூட செல்ல முடியாது.
ஒவ்வொரு தெருவிலும் இன்று ஹோலிகா பேன்ட-சட்டையுடனோ அல்லது அதை விட கேவலமான ஒரு துணியுடனோ தெரு முனையில் நிற்க வைக்கப்படுகிறாள்.
அரக்கி அவளா? இல்லை அரக்கர்கள் இந்த இளைஞர்களா?
ஹோலியாம் ஹோலி!!!