பிருந்தாவனமும் நந்தகாவும்
" நம்ம கார் மட்டும் தானியங்கியா - தானாவே ஓடி, போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு போக முடியும்னா, நேரப் போய் எதாவது ஒரு கோயில்ல தான் நிற்கும்" - இது என் பசங்களோட கமன்ட், ஒவ்வொரு முறை கோயிலுக்குப் போகும் போதும்.
ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் பண்ண ஆரம்பித்ததிலிருந்து, 106 திவ்ய தேசங்களையும் சேவிக்க ஆவல் அதிகமானது. ஆனால், சோழநாட்டு திருப்பதிகளும், சில பிரபலமான திருப்பதிகளும் தான் இதுவரை பார்க்க முடிந்தது. இப்ப வடநாட்டில் வசிப்பதால் , இந்த தடவை பையன்கள் வரும்போது வடநாட்டு திவ்யதேசங்களை ஒவ்வொரு இடமாக பார்க்க திட்டம் போட்டோம். அதன்படி முதலில் போனது வடமதுரை.
வட மதுரை - மங்களாசாசனம் -> ஆழ்வார்கள் -> பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார். மொத்தம் 50 பாசுரங்களால் பாடப்பெற்ற திருத்தலம் .
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத் தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் -திருப்பாவை
ரயிலில் மதுரா சென்று, அங்கிருந்து பிருந்தாவனத்திற்கு ஆட்டோவில் சென்றோம். 150-200 க்குள் ஆட்டோ கிடைக்கிறது .
மதுரா சுத்தமாக இருக்காது, என்பதால் நேரே பிருந்தாவனம் போய்விட்டோம். பிருந்தாவனத்தில் ட்ரஸ்ட்களால் நடத்தப்படும் நிறைய கெஸ்ட் ஹவுஸ்கள் உள்ளன. தரமும் நன்றாகவே உள்ளது. விலையும் மதுராவை விட குறைவே. 'போஜனாலய் என்ற வெங்காயம்,பூண்டு கூட சேர்க்காத வட இந்திய தாலி - சாப்பாட்டு இடங்களும் உள்ளன. மசாலா வகையறாக்கள் இல்லாத, அளவில்லாத, சாத்வீகமான உணவு இங்கு கிடைக்கிறது. போகுமிடத்தில் இருக்க நல்ல இடமும், சாப்பாடும் சரியாக இருந்தால் தான் நம்மால் இடங்களை பார்த்து ரசிக்க முடியும்.
குறைந்தது 3 நாட்களாவது இருந்தால் தான் நாம் கண்ணன் பிறந்து, இடம் மாறி, விளையாடி அதிசயங்கள் நடத்திய இடங்களை பார்த்து முடிக்க முடியும்.
விருந்தாவன் ஊரே பக்தியில் பொங்கி வழியுது. நாங்கள் முதலில் போனது 'பாங்க்கே பிஹாரி மந்திர்'. இது தான் பழமையான கோயில். சாதாரண நாட்களில் கூட கூட்டம் நெருக்கி அடிக்கிறது. விசேஷமான நாட்களில் தள்ளு முள்ளு தான். இங்கு ஸ்வாமி ஹரிதாஸ் அவர்களால் 1862 ல் கண்டெடுக்கப்பட்ட கிருஷ்ண விக்ரஹம் உள்ளது. பாங்க்கே எனும் சொல்லுக்கு ‘ மூன்றாக வளைந்த’ என்றும், பிஹாரி எனும் சொல்லுக்கு ‘தெய்வீக ரசிகர்’ என்றும் பொருளாகும். இந்த பெயருக்கேற்பவே இக்கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலை மூன்றாக வளைந்த திரிபங்கா கோலத்தில் காட்சியளிக்கிறது. இவ்வளவு கூட்டத்தில் பார்த்ததாலோ என்னவோ கண்ணன் முகம் பிடிபடவேயில்லை. 10 நிமிடத்திற்கு ஒருமுறை திரை போட்டு விடுகிறார்கள். திரை திறந்து 2,3 நிமிடம் கழித்து மறுபடி மூடி விடுகிறார்கள். தென்னிந்திய கோவில் போல் வரிசை எல்லாம் கிடையாது. கும்பலாக உள்ளே சென்று தூரத்திலிருந்த படி தான் கண்ணனை காண முடியும்.
பாங்கே பிஹாரி Bhanke Bihari மந்திர் பிருந்தாவனம்
பக்தர்களின் பக்திக்கு குனிந்து வளைந்து செவி மடுப்பதால் அவன் 'பாங்க்கே பிஹாரி ' . கோயிலுக்குப் போகும் வழியெங்கும் சாட், பானி பூரி கடைகளும், தூத் பேடா கடைகளும் தான். கண்ணன் நமக்கு கண்ணுக்கு, ஆத்மாக்கு உணவா வரேன்னு குனிஞ்சு காத்திருந்தாலும், நமக்கு நாக்குக்கும் வாய்க்கும் கிடைக்கப் போகும் உணவு தானே பிரதானம்.
அதற்கு பக்கத்திலேயே உள்ளது ( 2 கிமீ ) யமுனா காட் YAMUNA GHAT என்னும் யமுனைக் கரை. கண்ணன் கோபிகளின் துகிலுரித்து, காளிங்க நர்த்தனம் ஆடிய இடங்கள். பழைய காலத்து கட்டடங்கள் வழியாக பரிக்ரமம் பண்ணலாம் . மாலையில் 6 - 6:30 யமுனா ஆரத்தி அற்புதம். என்ன ஒண்ணு , சின்ன சின்ன குழந்தைகள் அகல் விளக்கு வாங்கிக்கோங்கன்னு செய்யும் தொந்தரவு தான் தாங்க முடியவில்லை. 5,6 வயசு குழந்தைகளை அப்படி விற்க அனுப்பிய பெற்றோர்களைப் பற்றி என்ன சொல்ல ?
யமுனா ஆரத்தி - பிருந்தாவனம்
Chir Ghat சீர் காட் - பிருந்தாவனம்
கதம்ப மரம் - பிருந்தாவனம்
இங்கு இருக்கும் படித்துறையில் தான் கண்ணன் குதிரை வடிவில் வந்த கேசி என்ற அரக்கனின் காலை பிடித்து சழற்றி வானில் எறிந்து துவம்சம் செய்த 'கேசி காட்'டும் KESI GHAT இருக்கு.
கேசி காட் Kesi Ghat - பிருந்தாவனம்
நதிக்கரையில் - பரிக்ரமா மார்க் PARIKRAMA MARG - வலம் வரும் வழி உள்ளது. நடப்பதற்கு சக்தி மட்டும் இருந்தால் அரண்மனை மாதிரி உள்ள படித்துறைகளின் வழியே யமுனையின் கூடவே நாமும் நடந்து கொண்டே இருக்கலாம்... அப்படி ஒரு தெய்வீக உணர்வு நம்முள் எழுகிறது, அங்கு வலம் வருபவர்களைப் பார்த்தால்.
விளக்கு விற்கும் குழந்தைகள்
புராதன கோயில்களே எக்கச்சக்கமாக உள்ள இடத்தில், புதியதாக ISKON மந்திர், ப்ரேம் மந்திர் என்று வண்ண வண்ண விளக்குகள், ஆடம்பரங்களுடன் சுற்றுலாத் தலங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பிடித்தவர்கள் அங்கெல்லாம் வேடிக்கைப் பார்க்க போகலாம். மனதுக்குள் இம்மியும் இறங்க முடியாத, கண்ணை மட்டும் கவரும் இடங்கள்.
ப்ரேம் மந்திர் - பிருந்தாவனம்
அடுத்த நாள் நாங்கள் சென்றது நிதிவனம். கண்ணன் விளையாடிய இடம். இங்கு தினமும் இரவில், கண்ணன், ராதை மற்றும் கோபிகளுடன் நடனமாடுவதாக மக்களால் நம்பப்படுகிறது. இங்கு உள்ள பாங்கே பிஹாரி கோவில் தான் புராதனமான கோவில் என்றும் சிலர் சொல்கிறார்கள். வன துளசி மரங்களால் ஆன சிறிய காட்டில் நடந்து செல்வதே அற்புதமாக இருந்தது. புழுதியாக உள்ள மண்ணில்,வரண்ட மரக்கிளைகளில் பச்சை பசேல் என்ற இலைகள் வருடம் முழுவதும் எப்படி என்பதே ஆச்சர்யமான ஒன்று. இங்கு உள்ள பாங்கே பிஹாரி மந்திரில் கண்ணன் ராதை விக்ரஹங்கள் உள்ளது.
நிதி வனம் - பிருந்தாவனம்
பிருந்தாவனத்தில் நாம் கண்டிப்பாக பார்க்க வேண்டியது ரங்காஜி மந்திர். நுழை வாயில் மட்டும் வட இந்திய பாணியில் உள்ளது. மற்றவை எல்லாம் - கோபுரம், பிரகாரங்கள், மூர்த்தி, வழிபாட்டு முறை எல்லாமே தமிழர்கள் முறை தான். ப்ரஹ்மோத்சவம், கருட சேவை எல்லாமே பங்குனி மாதத்தில் நடைபெறுகிறது.
கி.பி 1845 ல் ஆரம்பித்து கி.பி 1851 ல் நம் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரங்கதேசிக ஸ்வாமிகளால் கட்டி முடிக்கப் பட்டதாம் ஆண்டாள் ரங்கமன்னார் கோவில்.. அங்கு இருப்பது Godha-Rangamannar. நம் ஆண்டாளுடன் ரங்கமன்னார். பூஜை செய்பவர்கள் நம் ஊரிலிருந்து போனவர்கள் தான். ராமானுஜர், கூரத்தாழ்வான், மற்ற ஆசார்யன் சன்னதிகளும் இங்கு உண்டு. பட்டாச்சாரியார் - குருக்களிடம் உள்ளே மூலஸ்தானம் வரை செல்ல விருப்பம் தெரிவித்தால் ஆண்களுக்கு வேட்டி கொடுக்கிறார்கள். கட்டிக்கொண்டு ஸ்வாமியை அருகே சென்று சேவிக்கலாம். பெருமாளும் ஆண்டாளும் அவ்ளோ அழகு.
ரங்காஜி மந்திர் - பிருந்தாவனம்
மாலை கண்ணன் பிறந்த இடத்தைப் பார்க்க மதுரா புறப்பட்டோம். கண்ணன் பிறந்த சிறைச்சாலை தான் கிருஷ்ண ஜன்ம பூமி. எப்பொழுதும் ஒரே கூட்டம் தான். ஆனால் பெரிய வாயில் , சொல்ல முடியாத அளவு கெடுபிடி, பாதுகாப்பு உள்ளதால் இங்கு நாம் நிதானமாக கண்ணன் பிறந்த இடத்தையும், அங்குள்ள கண்ணனையும் சேவிக்கலாம்.
மதுரா - கண்ணன் பிறந்த இடம் photo by google
இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று, கண்ணன் கோவிலின் கோபுர கொடியும் , அடுத்து ஒட்டியே உள்ள மசூதியின் கொடியும் ஒரே நேர்க்கோட்டில் அசைந்தாடுவது நம் நாட்டில் தான் பார்க்க முடியும். 'மேரா பாரத் மஹான்' தான்.
மறுநாள் நாங்கள் 3 பேர் தான் என்பதால் ஆட்டோவிலேயே நந்தகாவ், கோகுல், ரமண் ரேதி, ராதா குண்ட், குசும் சரோவர், கோவர்தனம் வரை போனோம்.
முதலில் - Nandgaon . நந்தகாவ் பிருந்தாவனத்திலிருந்து சுமார் 35 கிமீ தூரத்தில் உள்ளது. நந்தகாவ் என்பது நந்தகோபரின் வீடு, பலராமர் மற்றும் லோகமாயா பிறந்த இடம். கண்ணன் வளர்ந்த இடம். அறிவு பூர்வமாக பார்த்தால் இதெல்லாம் நம்ப முடியாமல் போகலாம். ஒரு யுகமே கழிந்துவிட்டது இதெல்லாம் நடந்து. ஆனால் அங்கு போன போது மனசு அடையற பரவசத்தை சொல்லி மாளாது.
பலராமர் மற்றும் லோகமாயா பிறந்த இடம்
அடுத்து பார்த்த இடம் 'ரமண் ரேதி ' ரமண் = வசீகரம் ,மோகனம். ரேத் = மணல். கண்ணன், பலராமனுடன் மாடு மேய்த்த இடம். ராதை, கோபிகளுடன் விளையாடிய இடம். லீலைகள் செய்த இடம். இங்கு உள்ள மணலில் , அந்த மணல் தம் உடம்பில் ஒட்டவேண்டு மென்று பக்தர்கள் விழுந்து புரள்கிறார்கள்.
ரமண் ரேதி
அங்கிருந்து கோவர்த்தன மலையை வலம் வந்தோம். 23 கி.மீ தூரத்தை மக்கள் நடந்தே பாத யாத்திரை போல் வலம் வருகின்றனர். நடக்க முடிந்தால் நல்ல அனுபவம். கோவர்த்தனம் அல்லது கிரிராஜ் குன்றை, கிருஷ்ணனின் இயற்கை வடிவமாக இங்குள்ளவர்கள் வணங்குகின்றனர். வலம் வரும் வழியிலேயே 'கோவர்த்தன சிலா' உள்ளது. கோவர்த்தன குன்றின் ஒரு பாறை அது.அதையும் வணங்கிக் கொள்ளலாம்.
கோவர்த்தன மலை
அதன் பிறகு குசும் சரோவர், ராதா குண்ட் போன்றவற்றை பார்த்து விட்டு மதுராவிடமிருந்து விடை பெற்றோம்.
குசும் சரோவர்
பின்குறிப்பு - 1.மதுரா,பிருந்தாவன்,போன்ற பெரிய கோவில்களில் எந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் அனுமதி கிடையாது.வெளியில் மட்டும் தான் போட்டோ எடுக்க முடியும். எல்லாவற்றையும் செக்யூரிடி இடத்தில் விட்டுச் செல்ல வேண்டி வரும்.தவிர்க்க முடிந்தால் நல்லது.
2.குரங்குகள் ராஜ்ஜியம் தான். எந்தப் பொருளையும் கையில் எடுத்துப் போகாதீர்கள். சாப்பிடும் பொருட்கள் மட்டுமல்ல ,கேமரா,பர்ஸ்,போன் கூட பிடுங்கிக் கொண்டு போய்விடுகின்றன. சில மாதங்கள் முன்பு ஒரு பெண்ணின் பர்சை பறித்துக்கொண்டு போய் பணத்தை வாரி இறைத்த போட்டோக்கள் செய்தித் தாளில் வந்தது.
3.நம் சாப்பாடு கிடைப்பது கஷ்டம் தான்.போஜனாலய் போன்ற இடத்தில் ஓரளவு தரமான சாப்பாடு கிடைக்கிறது. இட்லி,தோசை மற்றும் Fast food எல்லா இடத்திலும் கிடைக்கின்றன.உத்தரபிரதேசம் யாதவர்கள் இடம்.பால் பொருட்கள்,sweet கள் ஏராளம். மதுரா தூத் பேடா - பால் கோவா அவசியம் வாங்கி வர வேண்டிய ஒன்று.
4.ஹிந்தி தெரியலைனா டாக்சி, ஆட்டோகாரர்கள் ஏமாத்தப்
பார்ப்பார்கள்.எச்சரிக்கை அவசியம்.
5. கோகுல் கோயிலில் நாங்கள் போகும்போது,அங்கு இருந்த 'பாண்டா' பூஜாரி திரை போட்டுவிட்டு, அங்கிருக்கும் 'கோசாலை'- மாட்டுக்கொட்டகைக்கு தானம் செய்யச் சொல்லி அரை மணி கதையளந்தார். பாவம், பயபக்தியுள்ள ஜனங்கள்,100-500 வரை தட்டில் போட்டனர். அத்தனை பேரும் போடும் வரை அவர் ஸ்வாமியை கண்ணில் காட்டவில்லை. இது போல் பல இடங்களில் நடக்கிறது.சாமி காணிக்கை,பக்தி எல்லாம் நமக்கும் சாமிக்கும் இடைப்பட்டது. இதில் கொள்ளையடிக்கவே வட நாட்டில் பாண்டா கும்பல்கள் உள்ளது. யாரிடமும் பேச்சு கொடுத்து மாட்டக்கூடாது.
மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப்
புத்தேளி ராகுவரே - திருமங்கையாழ்வார்
கிருஷ்ணார்ப்பணம்.
No comments:
Post a Comment