Sunday, 19 June 2016

                                தாயும் சேயும் ...


                 இன்று காலை மிகவும் மங்களகரமாக விடிந்தது.

      எங்கள் தெருவில் நிறைய மரங்கள் இருப்பதால், அக்கம்பக்கத்து பசுமாடுகளுக்கு ரிலாக்ஸாக அசை போட தோதான இடமாக ஆகி விட்டது.


     மாடுகள்லாம் கொட்டாய்களில் அடைந்திருந்தது 20ம் நூற்றாண்டில் வேணா இருக்கலாம். இப்பொழுதெல்லாம் போராடாமலே அதுங்களுக்கு சுதந்திரம் கொடுத்து,  தண்ணி தெளித்து துரத்தியாயிற்று.

     கறக்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுதும் அங்கிங்கெனாதபடி அது எங்க வேணா திரியலாம். அதுவும் இரவு 10 மணிக்கு மேல் மெயின் ரோடின் நடுவில் தான் ஒரு 10 மாடு கும்பலா, ரிலாக்ஸா, ரெஸ்ட் எடுக்கும். ஊருக்கு புதுசா யாராவது வந்து,  இராத்திரில கார் ஓட்டினாங்களோ... பகல்ல பாத்த அதே  ரோடு தான்னு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டாங்க. மாட்டு மந்தையாகி இருக்கும் ரோடு.


         எங்க ஊர் கவர்ன்மென்ட் என்ஜினியரிங் காலேஜ்ல , பசங்களுக்கு காலைல கல்லூரி போனதும் முதல் வேலை கிளாசிலிருந்து மாடுகளை துரத்தி, சாணி அள்ளுவது தான். இது ஜோக்கில்ல. உண்மை.


     இப்படி வழக்கமா எங்க தெருவுக்கு வர்ற மாடுகள்ல ஒண்ணுக்கு நேற்று பிரசவவலி.  இராத்திரி பூரா தவிச்சிருக்கு பாவம். விடிகாலைல நல்லபடியா பிரசவம் ஆகி தாயும் சேயும் நலம்.

     நாங்க அம்மா மாட்டுக்கு கோதுமை மாவு, வெல்லம், வாழைப்பழம், தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினதும் அதுக்கு தெம்பு வந்தது. கன்றும் பால் குடிக்க ஆரம்பித்து விட்டது.

     இதல கொடுமை என்னன்னா மாட்டுக்கு சொந்தக்காரன் காலைல 11 மணி வரை கூட வரலை.  அப்புறம் நாங்க வேலைல பிசியாகிட்டோம். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் மாடு கன்று இரண்டையும் காணோம்.

     சினை மாடு எப்ப கன்னு போடும்னு , மாட்டைப் பார்த்தாலே சாதாரணமானவங்களுக்கே கொஞ்சமாவது விளங்கும். கிராமங்களில் 1,2 மாடு உள்ளவர்கள் கூட, மாடு கன்னு போடப் போகும் நாட்களில் ஊருக்கு கூட போக மாட்டார்கள். பிரசவத்தில் என்ன வேணா நடக்கலாம். சில முதலுதவியெல்லாம் கூட செய்யவேண்டி வரும். அந்த அளவுக்கு கூட கரிசனம் இல்லாத என்ன  ஜன்மங்களோ.  ஊர்ல , தெருவுல பிளாஸ்டிக்கயும், பேப்பரையும், அழுகின காய்களையும் மேய்ந்துட்டு வந்து, பாலால பாத்திரம் நிரப்பினா சரி. அவர்களுக்கு வேண்டியது காசு. நமக்குத் தான் இது புதுசோ என்னவோ? பண்ணைல உள்ள எல்லா மாடுமே இப்படித் தான் கன்னு போடுதோ என்னவோ?

    

    



Saturday, 13 February 2016

                             சமர்ப்பணம்-2


 

முதல் சமர்ப்பணம் இங்கு http://vsanthamullai.blogspot.in/
                                                                        






  


      யாரையும் சோகப்படுத்தணும்னு  இதை எழுதலை. பிரிந்து 1 மாதம் ஆகியும், இன்னும் இங்கேயே இருக்கிற உணர்வை கொடுத்துக் கொண்டு,  நம்பமுடியாத அதிசயமாய் வாழ்ந்த அஷ்வத்தின் அம்மா, அப்பாக்கு இதை படிப்பதால் நிறைவு ஏற்படுகிறது.  அவர்களுக்கு சமர்ப்பணம் இது.

     குறும்புக்கார குழந்தையாய் எல்லோரையும் கவர்ந்தவனை, கேன்சர் எப்படி அப்படி பொறுப்பான பிள்ளையாய் மாற்றியதோ?

    அவனுக்கு முதன் முதலில் வலி தீவிரமாக ஆரம்பித்தது, அவனின் உபநயனத்தன்று.  ஏதோ கால் குடைச்சல் வலி என்றே அனைவரும் நம்பிக்கொண்டு மெத்தனமாக இருந்து விட்டோம்
. இன்று வீடியோவில் அவன் முகத்தைப் பார்த்தால் தெரிகிறது அவன் பட்ட அவஸ்தை.

     ஸ்மார்ட் போன் வைத்திருக்கிற 18 வயசு பையனுக்கு internet உபயத்தில் நன்றாக தெரியும் தன் நோயைப் பற்றியும், அதன் தீவிரம் பற்றியும். இருந்தாலும், ஒரு நாள் கூட சிடுசிடு என்றோ,  கோபம்,  ஆத்திரம்,  அழுகை எதுவும் இல்லாமல்,  உடம்பு வலி,  மன வலி,  பெற்றோர்கள் படும் அவஸ்தை,  வெளியில் போக முடியாமை,  விளையாட முடியாமை,  அவனுக்கு மிகவும் பிடித்த சைக்கிள் விட முடியாமை....இப்படி எத்தனை கஷ்டங்களை அவன் தாங்கினான்.


        ஒவ்வொரு முறையும்  டாக்டரோ , நர்ஸோ மருந்து கொடுத்தாலோ அல்லது ஊசி போட்டாலோ  அதன் பெயர், எதற்கு போடுகிறார்கள்,  அதனால் என்ன நன்மை என்று ஒவ்வொரு முறையும் கேட்டுவிட்டுத்தான் போட அனுமதிப்பான்.

     சென்னை வெள்ளத்தின் போது அவனுக்கு க்ளைமேட்டால் வீசிங் - மூச்சுத்
திணறல் அதிகரித்து விட்டது.  இருந்தாலும் தன் நண்பர்களுடன் சென்று உதவி செய்ய முடியவில்லையே என்று தான் கவலைப்பட்டான்.

     பெற்றோர்களுக்கும் அவன் நிலைமை புரிந்தாலும், கடவுள் எதாவது அதிசயம் நிகழ்த்தி காப்பாற்றுவார் என்றே நம்பிக் கொண்டிருந்தனர். Immune
அதிகரிக்க எத்தனை வித விதமான காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்புகள் கலந்து அவனுக்கு ஜூஸ் கொடுப்பார்கள். அந்த கஷ்டத்திலும் அவன் அம்மாவை கிண்டலடிப்பான் - 'சும்மா சொல்லு பட்டு, என்னென்ன போட்டு அரைச்சிருக்க இதல? நான் கண்டு பிடித்து விடுவேன் இருந்தாலும் நீயே சொல்லு' என்று.
    

    ஒரு கோவில்,  ஒரு  தான தர்மம், ஒரு ஹோமம் விடவில்லை அவர்கள்.  அத்தனை துயரத்திலும் வீடே அவ்வளவு மங்களகரமாக இருந்தது.
    
      எத்தனை மணி ஆனாலும் அவன் வாய்க்கு பிடிப்பதை செய்து போட அம்மா, வாங்கி வர அப்பா. கடைசி கடைசில ஒரு நாள் பாதி  இரவுக்கு மேல் , fanta குடிக்கணும் போலிருந்தது அவனுக்கு.  இவர்கள் எங்கெங்கோ அலைந்து  ரொம்ப தூரம் சென்று திறந்திருந்த கடையிலிருந்து வாங்கி வந்தார்கள்.  ஒரு வாய் குடித்துவிட்டு அவன் சொன்னது "அப்படியே திருப்பதி பெருமாளைப் பார்க்கிற மாதிரி இருக்கு பட்டு". பட்டுங்கறது அவன் அம்மாவை கடைசி நாட்களில் அழைத்த பெயர்.

      ஒரு நாள் யாரையாவது பார்க்க ஆஸ்பத்திரி போனால் கூட , எப்படா வீட்டுக்கு போவோம்னு இருக்கு நமக்கு.  ஒன்றரை வருடமா அந்த குடும்பம் பட்டதே கஷ்டம், அப்பப்பா. ஒவ்வொரு தடவை டெஸ்ட் ரிசல்டின் போதும்
துளித் துளியாக துடித்தார்கள்.  அவர்கள் மட்டுமின்றி அத்தனை சொந்தங்களுக்கும் அதே நிலை தான்.

       வட இந்தியாவில் எதாவது பரிட்சை, இன்டர்வ்யூ அல்லது ஊருக்குப் போகும் போது தயிர்+சக்கரை கொடுத்து அனுப்பி வைப்பார்கள். எங்க அஷ்வத் நாராயணனிடம் போவதற்கு முன் அவன் அம்மா கையால் லஸ்ஸி சாப்பிட்டு விட்டுப் போனான். போவதற்கு 2 நாட்கள் முன் அவன் அப்பா, அம்மாவிடம் சொன்னது - 'நாளைக்கு நான் ICU ல ஷிஃப்ட் ஆயிடுவேன். நீங்க சும்மா அழக் கூடாது' என்பதே.

   

     பெரியாழ்வாரே, தன்னுடைய பெரியாழ்வார் திருமொழி 4ம்பத்து,10ம் திருமொழியில் 10 பாட்டிலும்,


        "எய்ப்பென்னை வந்து நலியும்போதங்கேதும் நானுன்னை

            நினைக்க மாட்டேன், அப்போதைக்கிப்போதே சொல்லி

                  வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளி யானே !"


     என்று,  உலக வாழ்க்கையை துறக்கும் போது கடவுளை நினைக்க முடியாது, அதனால் இப்போதே சொல்லி வைக்கிறேன், என்னை உன்னடியில் சேர்த்துக் கொள் என்கிறார்.

     தேவப்பெருமாளும், 6 வார்த்தைகளில், திருக்கச்சி நம்பிகள் மூலம் இராமானுஜருக்கு சொன்னதும்,  அந்திம காலத்தில் கடவுளை நம்மால் நினைக்க முடியாவிட்டால் கூட அவன் நம்மை ரக்ஷிப்பான் என்பதே.  வராஹப் பெருமானும் பூமி தேவிக்கு இதே உத்தரவாதம் தான் அளித்திருக்கிறார்.

     ஆனால் எங்க அஷ்வத் கடைசியில் CCU வில் இருக்கும்போது,  ஸ்ரீசுக்தம் மற்றும் த்வய மந்திரம் காதில் கேட்டுக்கொண்டு, பெருமாள் தீர்த்தம் -துளசி சேர்த்துக் கொண்டு, மற்றும் ஆசாரியன்  தானே அவனுக்காக பண்ணிக்கொண்டு அளித்த ப்ரபத்தி-சரணாகதியின் பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு மோக்ஷம் சென்றிருக்கிறான்.

    இன்னமும் பள்ளி ஆசிரியர்களிலிருந்து ,கல்லூரி HOD வரை மற்றும் அனைத்து நண்பர்களும் அவர்கள் வீட்டுக்கு வந்த வண்ணமே இருக்கின்றனர். இன்றும் அவன் தோழர்கள் முன்பு போலவே அவன் வீட்டிற்கு வந்து, அஷ்வத்தின் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிச் செல்கின்றனர். அவர்களுக்கு போன் பண்ணிக் கொண்டும் இருக்கிறார்கள்.

     அவன் பிரிந்து 1 மாதத்திற்று மேலே ஆனாலும், தினமும் காலையில்  பாலை ஆற்றி வைப்பது முதல் - மதியம் & இரவு உணவில் அவனுக்குப் பிடித்ததை சமைத்து அவனுக்கு படைத்துவிட்டு பிறகு உண்பது வரை அவனுடனே கழிகிறது அவர்களின் பொழுது. எங்களைப் பொருத்தவரை அவன் இங்கேயே எங்களுடன் எங்கள் மனங்களில் தான் இருக்கிறான்.

      பஞ்ச தத்துவத்தால் ஆன அஷ்வத்தின் உடலை வேண்டுமானால்,  நம்மால் காண இயலாது.  ஆனால் ஆறாவது தத்துவமான நம் மனதால் அவனை ஸ்பரிசிக்க முடியும்.


     அவனுடைய Facebook Status -

    'A few bad chapters does not mean that your story is over, it just means that very soon....its going to be an EPIC

 NEVER. GIVE. UP !'

   கரெக்ட் தான். அவன் வரலாறு மற்றுமின்றி இதிகாசமாகவும் ஆகி விட்டான். அவனே அவன் பெற்றோர்களை தெய்வமாக இருந்து பார்த்துக் கொள்ளட்டும்.








Thursday, 21 January 2016

            சமர்ப்பணம்..... 

 

     


       எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னு புரியல..

 5,6 வயசுல பாவாடை சட்டையோட இருக்கும்போதே கைக்குழந்தைகளை தூக்கி  கொஞ்சுபவள் அவள்.  சதா குட்டிப் பசங்களோட விளையாடுபவள்.  அவளுக்குன்னு ஒரு குழந்தை வந்தால் எப்படி இருந்திருப்பாள்... 


      நல்ல கணவன், மாமியார், நாத்தனார், மைத்துனர்னு அன்பான மாமியார் வீடு. அவளைத் தெரிந்தவர்கள், அவளுடன் பேசியவர்கள் அவள் சிரித்த முகத்தை மறக்கவே மாட்டார்கள். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு இடத்திலும் செல்லம் அவள்.


    பிரசவத்துல ரொம்ப கஷ்டப்பட்டுத் தான் பையனை பெற்றெடுத்தாள்.  . மொத்த குடும்பத்திற்கும் அவன் சொல்றது வேதம்.  அவன் வைத்தது சட்டம்.  செல்லமா வளர்த்தா கூட சமத்தாவே வளர்ந்தது குழந்தை.  அவ்வளவு துறுப்பான அறிவான குழந்தை அவன். அவள் உலகமே அவன் தான்.  அவளுக்கு மட்டுமின்றி மொத்த குடும்பத்தின் கண்மணியானான் அவன். அவன் என்ன சொன்னாலும் கேட்பார்கள்.

    10 வது முடித்து நல்ல மார்க் வாங்கியிருந்தும்,  மேத்ஸ், சயன்ஸ்னா 12th ல  entrance exam, அட்மிஷன்னு குழந்தை கஷ்டப்படும்னு காமர்ஸ் படிக்க வைத்த அப்பா அம்மா.
  
       12வதில்  நல்ல மார்க் வாங்கியதால்  அவங்க ஊர்ல சிறந்த கல்லூரி ஒன்றில் அவனுக்கு இடம் கிடைத்தது .  கல்லூரி திறக்க சில நாட்களே இருந்தது.

   12வது பரிட்சை முடிந்ததும் அவன் ஜிம்முக்கு போக ஆரம்பித்தான். சைக்கிளிலும் வீலிங் செய்பவன். சந்தோஷமா போயிட்டிருந்த வாழ்வில் திரும்ப முடியாத திருப்ப முடியாத திருப்பம் வந்தது. 


     திடீரென்று  ஒரு நாள் தொடையில் வலிக்க ஆரம்பித்தது அவனுக்கு. மருந்து தடவி,  ஒத்தடம் கொடுத்தும் வலி குறையாததால் டாக்டரிடம் போனார்கள்.

டாக்டர் இவர்களிடமே கேள்விகள் கேட்டு ஜிம் போவதால் தசை வலி என்று முடிவு கட்டி மருந்து,  ஊசி என்று muscle pain க்கு ட்ரீட்மென்ட் கொடுத்தார்.

      இப்படியே 2 மாதம் ஓடியும் வலி அதிகரித்ததேயன்றி குறையவில்லை. டாக்டருக்கும் சந்தேகம் வந்து ct scan எடுக்க சொன்னார். ..

    விழப்போகும் இடியைப்பற்றி எந்த அறிகுறியும் இல்லாமல், அப்பாவும் அம்மாவும் பையனுடன் டாக்டரைப் பார்க்க போனார்கள். எலும்பு முறிவு அல்லது தசையில் எதாவது பிரச்னை இருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் ரிசல்டில் Metastatic Osteosarcoma என்று வந்திருந்தது. டீன் ஏஜ் வரை குழந்தைகளுக்கு குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு வரும் bone cancer. வாழ்க்கையே முடிவுக்கு வந்த நிலையில் இருந்த பெற்றோர்களை,  அன்று வரை குழந்தையாய் இருந்த 18 வயது பையன்,  தோள் தாங்கி வீட்டுக்கு அழைத்து வந்தான்.

  அதிர்ச்சியில் இருந்து மீண்டு,  சிகிச்சை ஆரம்பித்தார்கள்.  அவனுக்கு  4 chemo கொடுத்து, சிறந்த மருத்துவமனையில் இந்தியாவின் தலைசிறந்த   orthopedic oncologist surgeon  அவன் தொடை எலும்பை நீக்கிவிட்டு, செயற்கை எலும்பு பொருத்தினார்.

     எல்லா டீன் ஏஜ் குழந்தை போல அவன் கவலை கீமோவில் போன முடி வருமா என்பதே. கீமோ முடிந்ததுமே முடி வந்துவிட்டது.

     ஆபரேஷன் முடிந்து, மீதி 4 chemo மற்றும் physio therapy யும் முடிந்து அவன் அம்மா உதவியுடன் கல்லூரி போக ஆரம்பித்தான்.

     இது நடுவில் கல்லூரி வர இயலாததை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்ததும் அவர்கள் முழு ஒத்துழைப்பும் தந்தார்கள். அவன் பூரண குணமானதும் கல்லூரி வரலாம்  என்றும் , 2 செமஸ்டர் பரிட்சையையும் சேர்த்து எழுதவும் அனுமதி தந்தார்கள். 

    10 மாதம்  பட்ட கஷ்டம் மறந்து கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்தான். அம்மாவின் உதவியுடன் சில நாட்கள் ஆட்டோவில் போனாலும், பிறகு பஸ்ஸிலேயே போக ஆரம்பித்தான். டிரைவர் கண்டக்டர்கள் பஸ்ஸை காலேஜ் வாசலில் நிறுத்தினாலும், மறுத்துவிட்டு பஸ் ஸ்டா
ப்பில் இறங்கி தான் செல்வான். கல்லூரியே அவனைப் பார்த்து ஆச்சரியப் பட்டது.  துளி தன்னிரக்கம், வெறுப்பு எதுவும் இல்லாமல் அவ்வளவு உயிர்ப்புடன் , ஊன்றுகோல் உதவியுடன் கம்பீரம் குறைவில்லாமல் வலம் வந்தான்.

     ஒருமாதம் தான் கல்லூரி போனான் . அதற்குள் திடீரென்று அவனுக்கு மூச்சத் திணறல்,  ஜுரம் வந்தது. மறுபடி lungs ct scan எடுத்ததில் 2 lungs பூராவும் கேன்சர் இருந்தது தெரிய வந்தது. முதல் இடியாவது தேவலாம் ஏதோ தேறிடுவான்னு நம்பிக்கைல நாளை ஓட்டின குடும்பம்,  இந்த அதிர்ச்சியில் நிலை குலைந்தது.

   காலேஜ் போன 1 மாசத்தின் சுகமான நினைவுகளின் உதவியால் வலி, வேதனை, சோகம், தன்னிரக்கம் எல்லாத்தையும் அந்த குழந்தை முழுங்கி விட்டு அடுத்த யுத்தத்துக்கு தயாரானது.

    திரும்பவும் முதலிலிருந்து கீமோ, ஆபரேஷன் கீமோ...  ஆண்டிபயாடிக் 4 நாள் சாப்பிட்டாலே வயிறெரிச்சல் நம்மால் தாங்க முடியாது. சின்னப்ப அமிர்தாஞ்சன் தடவினாலே எரியுதுன்னு ஊரை கூட்டும் அந்தக் குழந்தை, 14 கீமோ 2 major ஆபரேஷனை,  ஒரு சொட்டு கண்ணீரோ முகச்சுளிப்போ இல்லாம தாங்கித்து.

     ஒன்றரை வருஷத்துல 18 வயசுலிருந்து 81 வயதுக்கான முதிர்ச்சி அவன் பேச்சில்,  நடத்தையில். அத்தனை உறவினர்களிடமும் அவ்வளவு அன்பு, கரிசனம். யாரைப் பார்த்தாலும் Thumps-up சிக்னலும் சிரிப்பும் தான் அவன் முகத்தில். தான் படற வேதனையை விட, அப்பா அம்மாவின் பயம் கலந்த வேதனையை தாங்க முடியவில்லை அவனால். தான் இல்லாமல் போகும்போது,அவர்கள் எப்படி தாங்குவார்கள் என்ற ஒரு கவலை தான் அவனுக்கு.

     கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லாத அவன், கடைசி நாட்களில் கேட்டது ms அம்மாவின் குறையொன்றுமில்லை தான். குறிப்பால் அவன் பெற்றோர்களுக்கு அவனுக்கு ஒரு குறையும் அவர்கள் வைக்கவில்லை என்று உணர்த்தியதாக இன்று நம்புகிறார்கள்.

     கடைசி கீமோ மட்டும் பாக்கி இருந்தது. இனி இது முடிந்து  வேறு ட்ரீட்மென்ட், கீமோ கிடையாதுங்கற சந்தோஷத்துடன் இருந்தார்கள்.

   ஹாஸ்பிடலில் இருந்து வந்த  2 நாளில் ஆரம்பித்த வயிற்றுப் போக்கு நிக்கவேயில்லை.

எந்த உணவும் அவனால் சாப்பிடவும் முடியவில்லை. திரும்பவும் ஆஸ்பத்திரி மருந்து ஊசி டெஸ்ட்...10 நாள் ஒண்ணும் சாப்பிடாம இருந்து இன்பெக்ஷன் குணமாகி கொஞ்சம் சூப்பும் , தயிரும் சாப்பிட்டான்...

    அத்தோட சரி. அதுக்கப்புறம் நடந்தத எழுத எனக்கு தெம்பில்ல..

     அவன் தன்னோட அம்மாக்கு 18 வயசுல குழந்தையாய் மறுபடி பிறந்து, எல்லா உபசாரமும், சேவையும் அவளிடம் பெற்று , ஒன்றரை வருஷத்துல ஓராயிரம் ஆண்டு வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்து விட்டு ஏமாற்றி விட்டு ஓடி ஒளிந்து விட்டான்.

     யார் அவன் முன்னாடி அழுதாலும் அவனுக்குப் பிடிக்காது. அவர்களை அறையை விட்டு போகச் சொல்லி விடுவான். கடைசியில் அவன் கேட்டதை செய்து தரும் அம்மா செய்த எதுவும் நாக்குக்கு ருசிக்க வில்லை. அம்மாவை தொந்தரவு செய்வதை தாங்க முடியாமல் அவளிடம் "நான் ஒரு நிமிஷம் அழட்டுமாம்மா"னு  பர்மிஷன் வாங்கி அவள் தோளில் சாய்ந்து 1 நிமிடம் அழுதது தான் அவன் இந்த கேன்சருடனான யுத்தத்தில் மனம் தளர்ந்தது.

     மற்றபடி உயர்த்திய கட்டை விரலுடனும்,வாக்கிங் ஸ்டிக்குடனும் அவன் போராட தயங்கவே இல்லை. கேன்சரால் அவன் உடலைத் தான் அழிக்க முடிந்தது. அவன் ஆத்மாவை, மனதை, தைரியத்தை நெருங்க கூட முடியவில்லை அந்த நண்டால்.

   கடைசியில் பேச தெம்பில்லாமல் போன போது, அவன் அம்மாவிடம்  கைவிரல்களை குவித்து உன் வாய்  குவிந்திருக்கக் கூடாது என்றும், பின் விரல்களை விரித்து சிரிப்பால் எப்பவும் மலர்ந்திருக்க வேண்டும் என்று சைகையால் தெரிவித்ததை சொல்லி, சொல்லி கதறும் அவளுக்கு என்ன பதில் சொல்வது ... 

என்றும் எங்களுடன் எங்கள் தைரியமாய், நம்பிக்கையாய் வாழப்போகும்

அஷ்வத்துக்கு சமர்ப்பணம்...

   
   

                                                      
     

    

Wednesday, 13 May 2015

                             
                           

PIKU என் அனுபவம்

        கடந்த 1,2 வருடமாக பேர் சொல்லும்படி வந்த ஹிந்தி படங்கள் Lunchbox, Special26, Madras-cafe,  Dedh Ishqiya . மத்ததெல்லாம் சுமார் கூட இல்லை.இந்த வருடம் அமர்க்களமே இல்லாமல் வந்த அருமையான திரைப்படம் PIKU. 

  விமர்சனம்லாம் எழுத வராது எனக்கு. ரொம்ப.. நாளைக்கு அப்புறம் பார்த்த ஒரு நல்ல  திரைப் படத்தைப் பற்றிய பகிர்வே இது.

    
     வயதானவர்கள், நம் அப்பா-அம்மா, அல்லது வேறு யாராக இருந்தாலும் எல்லோர் கவனமும் அவர்கள் மீது தான் இருக்கணும் என்று ஆசைப்படுவது நியாயமே! இந்தக் கருத்து தான் Piku வின் உயிர் நாடி.


   PIKU - Amitabh Bachchan, Deepika Padukone, IrfanKhan, Moushumi Chatterjee, Ragubeeryadav, Jishu Sengupta நடித்த ஹிந்திப்படம் . Madrascafe படத்தை இயக்கிய ShoojitSarkar இயக்கியது.அறிமுக இசையமைப்பாளர் AnupamRoy இதயங்களை வருடி இருக்கிறார் பாடல்களாலும் பின்னணி இசையாலும்.

     படம் ஆரம்பித்தவுடனே வரும் அந்த வீணையா, sarod ஆ னு தெரியாத, கண்ணீர் வரவழைக்கும்  டைட்டில் இசையே நம்மை படத்துக்குள் உள் இழுத்துக் கொள்கிறது.
   
      constipation problem உள்ள, சுயநலமுள்ள, தனக்கு இல்லாத வியாதிகளையெல்லாம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, தன் குடும்பத்திற்கு (மகள் பிக்கு- தீபிகா & வேலைக்காரர்கள்) தொந்தரவாக இருக்கும் பாத்திரமாக அமிதாப். அவருக்கு சொல்லவா வேண்டும். கேக்-வாக் தான்.

     அவருக்கு மகளாக,எல்லாவற்றிற்கும் எரிச்சல் படும், அன்றாட வாழ்க்கையின் நிதர்சனமாக தீபிகா. இவருக்கு இப்படியெல்லாம் நடிக்க வரும்போது, ஹேப்பி நியூ இயர் மாதிரி படங்களில் ஏன் நடிக்கணுமோ? தீபிகாவின் ஆகச்சிறந்த படம் இது தான்.


      டாக்சி கம்பெனி ஓனரான  இர்ஃபான் கான்  அமிதாப், தீபிகாவை டில்லியிலிருந்து கொல்கத்தா அழைத்துச் செல்லும் டிரைவர். இவர்களின் உரையாடல்கள், சண்டைகள், மற்றும் பயணம் தான் Piku. எப்போதும் போல இர்ஃபான்கான் கதாபாத்திரமாகவே காட்சி தருகிறார்.

    அப்பா மகள் உறவை, நாமே 2 மணி நேரம் நம் வயதான அப்பாவுடன் சண்டை யிட்டுக் கொண்டு, வாழ்ந்து கொண்டிருப்பதாக ஒரு தாக்கத்தை, இப்பவே அப்பாவை பார்க்க மாட்டோமா என்ற  ஏக்கத்தை ஏற்படுத்தியது இந்தப் படம்.


  
     படம் நெடுக வரும் shit,constipation,வயிற்று உபாதை பற்றிய வசனங்கள் கொஞ்சம் அதிகம் என்றாலும், முகம் சுளிக்க வைக்கவில்லை.

     இசை அவ்வளவு புதுமை+மென்மை.

    படத்திலுள்ள எல்லோரையுமே நிஜத்தில் காண்பது போல் தான்  இருந்தது.

     மொத்தத்தில் குத்துப்பாட்டு, டூயட்கள், குண்டாக்களின் சண்டைகள் இல்லாத மனசை விட்டு இன்னும் போகாத Piku.

     எல்லா மகள்களுக்கும் பிடிக்கும்.


 மொத்தமே ஒரு நாலைந்து பேரை வைத்துக் கொண்டு இவ்வளவு அருமையான படத்தைக் கொடுத்த இயக்குனருக்கு சபாஷ்! இந்திய சினிமா சாகவில்லை இன்னும்.













  

Friday, 19 December 2014

                                                      மார்கழியாம் மார்கழி


   
ஒவ்வொரு வருஷமும் மார்கழி எப்படா வரும்னு காத்திருக்கறவ நான். நிஜமாலுமே கண்ணன், காலத்தின் உருவெடுத்தால் மார்கழி மாதிரி தான் இருந்திருப்பான்.

     அப்படிப் பட்ட மார்கழி மேல் வெறுப்பே இருந்தது  ஒரு காலத்துல.
ஏழெட்டு வயசுல ஆரம்பிச்சது , இந்த மார்கழியோட மல்லுக்கட்டல்.    

     எப்பவும்  காலங்கார்த்தால  6 மணிக்கு  MS அம்மாவின் சுப்ரபாதம்   பாடி எங்களை  எழுப்பும்  அப்பாவின் ரேடியோ,  இந்த மார்கழி வந்தா 5:30க்கே எம்.எல்.வி  அவர்களின்   'மார்கழித் திங்கள்'னு திருப்பாவை  'பாடி உசுற வாங்கும்.

     ஏற்கனவே இந்த மாசத்துல  நடுநிசில வரும்  'சங்குஊதி' யோட சங்கு சத்தத்துல பயந்து நடுங்கி தூக்கம் போயி திரும்ப தூங்க ஆரம்பிக்கும்போது  குடுகுடுப்பைக்காரன் வந்து குறி சொல்ல ஆரம்பிச்சுடுவார். அவர் போனதும் சைஞ் சப்னு பஜனைக் கோஷ்டி வந்துடும்.

      அரைகுறை தூக்கத்துல போர்வைக்குள்ள சுருண்டு கிடக்கும் போதுதான் நம்ம வீரமணி ஐயாவோட'  பளளிக்கட்டு சபரிமலைக்கு' ஆரம்பிக்கும்.  அது என்ன ஊரையே எழுப்பி விட்டுடணும்னு ஒருவெறியோ இவங்களுக்கு, எங்கப்பாவையும் சேர்த்துத்தான் சொல்றேன்.

     எல்லாரும் போனதும் நிம்மதியான தூக்க-சொர்க்கத்துல இருக்கும்போது தான் திருப்பாவை..

     இந்த மாசத்து மேல வெறுப்பு வந்ததுக்கு  இன்னொரு காரணம்
அரைப்பரிட்சை.  இந்த குளிர்ல எழுந்து குளிச்சுட்டு ஸ்கூல் போறதே பெரிசு. இதல படிக்கவும் செய்யணும்னா ....

      பெரியவங்களுக்கு   என்னா,  பரிட்சை அன்னிக்கு விடிகாலைலயே எழுப்பி விட்ருவாங்க .  எழுந்ததும் காபி டம்ளரும் புத்தகமுமா படிக்கறோம் பேர்வழின்னு  வெந்நீர் அடுப்பைச் சுத்தி  உட்கார்ந்துடுவோம் 7 பேரும்.(கூட்டுக்குடும்பம்).  இதல சண்டை  வேற, குளிர்காய  யார் நெருப்பு கிட்டக்க  உட்காரர்துன்னு.  படிப்பெல்லாம் ஏது? வம்பு  தான்.

       மூணாவது கடுப்பு கோலம்.  கலர்ப்பொடி கலாசாரம் கிராமத்துக்கும் வந்ததும்,  நம் வீட்லயும் மார்கழி பூரா கலர்க்கோலம் தான்னு முடிவெடுத்து,   ராத்திரியே கோலமெல்லாம் செலக்ட் பண்ணி வச்சுட்டு அம்மாவோ  சித்தியோ கோலம் போட்டுட்டு,  ஊரே எழுந்தாச்சு, சூரியன் தலைக்கு மேலே வந்தாச்சுன்னு எதாவது சொல்லி, போய் கலர் போடுடின்னு நம்மள உலுக்கி  எழுப்பும்போது  தான், லைப்ல பண்ண முதல் முட்டாள்தனம்  இ்ந்த கலர்க்கோல ஐடியான்னு  தோணும்.

      இதவிட பெரிய கொடுமை பெருமாள் கோவில்ல திருப்பாவை ஒப்பித்தல் போட்டி ன்னு ஒண்ணு  ஒரு வருஷம் ஆரம்பிச்சது.  இருக்கற தமிழ்ச் செய்யுள படிக்கவே ஒம்பாடு எம்பாடா இருக்கு. இதுல இத வேற படிக்கணும்னா எரிச்சல் வருமா வராதா? நீங்களே சொல்லுங்க.

     அந்தக்காலத்துல நம்ம எரிச்சலால யாருக்கு என்னா? பெரியவங்க எங்க  பேரை கொடுத்து, படிச்சு ஒப்பிங்க பசங்களான்னா ... பத்திண்டு வரும் திருப்பாவையைப் பார்த்தா.  ஒண்ணு ரெண்டு  மனப்பாடம் பண்ணிட்டு அப்பா கண்லயே படாம சுத்துவோம்.

     இப்படியே 30 நாளும் போய், போகி வந்தால், பட்டையும், கம்பளியையும் தவிர்த்து வீட்டிலுள்ள அத்தனை துணிகளையும் தோய்க்கணும்கறது பாட்டி குடுக்கற வேலை. அவர் இருக்கும் வரை இது நடந்தது.

    மார்கழியிலேயே பிடிச்சது சூடான பெருமாள்கோவில் பொங்கல் மட்டும் தான்!

      போதும்டா சாமி,மார்கழி! ஆளைவிடுன்னு ஆயிடும் ஒவ்வொரு வருஷமும்.

       இதெல்லாம் பழைய கதை.

    வளர வளர அறிவும்,பக்தியும் வளர்ந்து,திருப்பாவை மட்டுமில்லாமல் நாலாயிரமும் நானே தேடிப் போய் படிக்க ஆரம்பித்து, என உள்ளத்தில் நாராயணனும் அவன் தேவிகளும் சப்பணமிட்டு அமர்ந்தபின் தான், 'தீக்குள் விரலை வைத்தால்' மட்டுமில்லாமல்  மார்கழியின் குளிரிலும் அவனை தொடமுடிவதை உணர  ஆரம்பித்தேன்.  
  
      அதுக்கும் மேல யாரும் எழுப்பாம 4:30க்கு எழுந்து கோலம் போட்டு குளித்து, பெங்களூர் லக்ஷ்மி கோயிலுக்கு 2 கிமீ நடந்து போய் திருப்பாவை சொல்லும்போது,  அதில்  பரமபதத்தையே  எனக்கு  பகவான் அருளினதை என்னன்னு சொல்ல. (  லீவு நாட்களில் அதி காலைல இருட்டுல  நான் தனியா போறேன்னு தானாகவே உணர்ந்து  என் 10 வயசு பிள்ளை, குட்டி சைக்கிள்ல என் கூடவே வரும்   )

           இந்த ஊரில்  டிசம்பர்ல  பகல்லயே 4-5 டிகிரி குளிர், கோலம் போட இடமே இல்லை. போக பக்கத்துல  கோயிலுமில்லை. இருந்தாலும்  சீக்கிரம் எழுந்து , மனசுலயித்து திருப்பாவை சொல்லறதுல வர ஆனந்தமிருக்கே! அடடா!

          'நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடுவானாய்,...' உடன்   மார்கழியில் குளிராயும் வருகின்றான் ஆழிமழைக்கண்ணன்

          //பின்குறிப்பு - இதில் எதுவுமே மிகைப்படுத்தப்படவில்லை. சூனிய மாதம் என்று கிராமத்தில் மார்கழியில் இத்தனையும் நடந்தது 30 வருடங்கள் முன்பு வரை . இத்துடன் காலையில், பெருமாள் கோவிலில் நாதஸ்வரமும் வாசிப்பார்கள் மாதம் முழுவதும். //

    
    

Saturday, 4 October 2014

                                                நானாவித நவராத்திரிகள்



       எல்லா இந்தியர்களுக்கும் முக்கியமான பண்டிகை  நவராத்திரி இன்னிக்கு தான் முடிவுக்கு வந்துருக்கு

         குழந்தைகள் இல்லைனா வேலையுமில்ல. வெட்டியா இரு்கும் போது மனம் அவலை அசை போடத் தொடங்கி விட்டது.

       சின்ன வயசுல ஊர்ல அனுபவித்த நவராத்திரி கொலு ஞாபகம் தான் முதலில் மனசுல வரது.

       நவராத்திரி வந்தாச்சுன்னா எங்களுக்கெல்லாம் தீபாவளிய விட கொண்டாட்டமா இருக்கும்

      பள்ளி்க்கு காலாண்டு விடுமுறைங்கறது  ஒண்ணு,  பரிட்சை அப்ப தான் முடிந்திருக்கும் அதனால படிக்க வேண்டாம்கறது  இன்னொண்ணு.  மேலும் பெரியவர்கள் வீடு ஒழிச்சுவதிலும் சுண்டலிலும் பிஸி. நம்மை மிரட்ட யாரும் இருக்கமாட்டார்கள்ங்றது வேற.

       மஹாளய அமாவாசையன்று வீடு ரெண்டு படும். ரயில் பொட்டியாட்டம் இந்த தெருவிவிருந்து அந்த தெரு வரை இருக்கும் கிராமத்து வீட்டை ஒழி்ப்பது சாதாரணம் இல்லை.

      நெல்லுத் தொம்பைகளை அகற்றி, கொலுவுக்கு இடம் ஒழிச்சணும். பிறகு அரிசி ட்ரம்களை முதல்  படியாகவும், ஸ்டூல்களை 2ம் படியாகவும், ப்ரிட்டானியா பிஸ்கட் டின்களை 3ம் படியாகவும்,செங்கல்களை வைத்து மத்த 2 படிகளையும் அமைத்து, அப்பா தாத்தா வேஷ்டிகளை போட்டால் ஆச்சு கொலுப்படிகள்.

     பொம்மைகள் மட்டும் என்ன அமெரிக்கா, சிங்கப்பூரிலிருந்தா வரவழைப்பார்கள்? .20,30 வருஷப் பழசு மரப்பாச்சிகள்,சோழிகள்,தலையாட்டி பொம்மைகள், அம்மா சித்திகள் செய்த மணி, ஒயர் பொம்மைகள் வைத்தால் ஆயிற்று கொலு.


     தட்டுல கொஞ்சம் மணல தூவி கேழ்வரகு விதைச்சா,பார்க் ரெடி.இன்னும் கொஞ்சம் அழகாக்கணும்னா? இருக்கவே இருக்கு ஜவ்வரிசி ஒட்டின முத்தாலத்தி தட்டு.

    சுண்டல்னா தினுமும் அந்த கருப்புக்கடலை சுண்டல்தான். ஒரு நாள் பட்டாணியோ,நிலக்கடலையோ கண்ணுல காட்ட மாட்டாங்க.
      இருந்தாலும் தாழம்பூவோ இல்ல கோயில் மாலைல இருந்து கிடைத்த சாமந்தியோ வைத்து தைத்த ஜடைல குஞ்சலமும், பட்டுப் பாவாடையுமா வீடு வீடா ஓடின நாட்கள் வாழ்க்கையின் தேன் தடவிய நாட்கள் .
       கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்குப் போன கொஞ்ச நாளிலேயே தசரா ஆரம்பமாச்சு .சரி கொலு,வெத்தல பாக்கு சுண்டல்னு இருக்கப் போகுதுன்னு பார்த்தா,கொலு வழக்கமே இல்லைன்னுட்டாங்க மாமியார்.

     கணவரும் கல்யாணத்துக்கு முன் அம்மா கூட இல்லாமல் தனியாக இருந்ததால் தமி்ழ்க்காரங்களையும் அவ்வளவா தெரியாது.
      ( பிறகு கொஞ்ச நாளிலேயே மாமியாரும் நானும் நம்ம கோயில் போக ஆரம்பிச்சு, தமிழ்காரங்களோட ஜோதில கலந்து,

கொலு இல்லாட்டாலும் சுண்டல் வெத்தல பாக்கு ரவிக்கை துணி கொடுக்க ஆரம்பிச்சுட்டோம்கறது வேற கதை.)

     அதனால   பக்கத்தில் உள்ள குப்தா, ஸ்ரீவஸ்தா,   மிஸ்ரா வீடுகளில் கொண்டாடும் முறையிலேயே நானும் கொண்டாடினேன்.
          8 நாளும் உபவாசமிருநது, விடிகாலையில் தேவி மந்திர்ல ஜலம் சமர்ப்பித்து, நவமி அன்னிக்கு பெண் குழந்தைகளுக்கு விருந்து வைத்து பரிசு கொடுத்து வணங்கி வழிபடும்  'கன்யா போஜன் 'உடன் உபவாசத்தை முடிக்கும் நார்த்இண்டியன் வழக்கப்படி நவராத்திரி கொண்டாட ஆரம்பித்தாயிற்று.
      நவராத்திரி ஆரம்பித்து 4,5 நாள் கழித்து தசரா பார்க்கப்போனோம். நம்மால கற்பனையே பண்ண முடியாத அளவுல காளி,துர்கா,தேவின்னு வித விதமான அலங்காரத்தோட மூர்த்திகள். அப்படியே பிரமிக்க வைக்கும் ஒளி அலங்காரத்துடன், ஊரே ஜக ஜகன்னு இருந்தது. எல்லா இடத்திலும் பண்டாராங்கற  அன்ன தானம்.

    .மொத மொதல்ல 20,25 அடி உயரத்துல,நாக்க தொங்க போட்டுண்டு கன்னங்கறேர்னு இருக்கற பத்ரகாளிய, ராத்திரி 10,12 மணிவேளைல பார்த்துட்டு   வீட்டுக்கு வந்தா தூங்கவே முடியல. அவ்வளவு பயமா இருந்தது.
      இப்படியாக வட இந்திய தசரா அறிமுகமானது.





    அடுத்தது பெங்களூரில் பார்த்த நவராத்திரி. பெரிய பெரிய பங்களாக்களில், தங்களுடைய வீட்டின் ஒரு தளத்தையே ஒழித்து, அத்தனை வெளி நாட்டு, உள் நாட்டு பொம்மைகளுடன் கொலு.

     விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் வெத்தலை பாக்கில். பக்தி அலலது சிரத்தையை விட வெறும் ஆடம்பரம், படாடோபமான சிலரின் நவாத்திரி.

     கடைசியில் தஞ்சாவூர் நவராத்திரி. எல்லார் வீட்டிலும் கொலு. அநேகமாக எல்லாப் பெண் குழந்தைகளும் பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு,கொலுவில் பாட்டுப் பாடும் சுத்தமான அக்மார்க் கொலு. நமக்கேத்த நடுத்தர வர்க்கத்து நவராத்திரி.

     திரும்பவும் நார்த்துககே வந்தாச்சு. நேற்று தசரா காளி பார்க்க வெளியில் போனோம். எள் விழ இடமில்லாத கூட்டம் காளி பார்க்கவும், ராம்லீலாவில் ராவணனை எரிக்குமிடத்திலும். சிவனேன்னு சீனிவாசர் கோயிலுக்குபோய் வந்து நவராத்திரி கொண்டாடினோம்.

        இன்னும் எத்தன விதமான நவராத்திரி காத்திருக்கோ வாழக்கைல.
     .
            .எலலோருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்






    


















Tuesday, 20 May 2014

            

        என் பையனும் கல்லூரிக்கு போனான்...


     ஒரு வழியாக பரிட்சை முடிவுகள் வந்து,  குழந்தைகளும், பெற்றோர்களும்
சிறிது நேரம் தங்களை ஆசுவாசப் படு்த்திக் கொள்ளும் நேரம் இது.
 
  ஒவ்வொரு தாய்க்கும் பிரசவம் எப்படி விசேஷமானதோ, தங்களுக்கு மட்டுமே  இப்படி ஒரு கஷ்டமும் வந்து, அதற்குப் பிறகு அளவிடமுடியாத சந்தோஷமும் கிடைத்தது என்று நினைக்கிறார்களோ, அதைப் போன்றது தான் குழந்தைகளை கல்லூரியில் சேர்ப்பதும்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய்  அமையும்  அந்த அற்புதமான காலகட்டத்தில் என்னுடைய அநுபவத்தின் பகிர்வு இங்கே.

  நாங்கள் வேறு மாநிலத்திலிருந்து  80 களின்  இறுதியில்  பெங்களூருக்கு   மாற்றலாகி வந்தோம் . என் மூத்த மகனை  நல்ல பள்ளியில்  8ம்   வகுப்பில்  CBSE  பாடத்திட்டத்தில் சேர்த்தோம் . 10 வகுப்பு வரை அதே பள்ளியில் படித்து தேர்வும் எழுதி விட்டான்.

      தேர்வு முடிவு வரும் முன்னரே 11-12  ம் வகுப்பு சேர்க்கைக்காக சில பேரை பள்ளி நிர்வாகம் தேர்ந்தெடுத்திருந்தது. அதில் என் பையனும்  ஒருவன்.

    .      இங்கிருந்து தான் எங்களுக்கு போறாத காலமே ஆரம்பித்தது.

      அவனுக்கு மருத்துவம்  படிக்க  விருப்பம்.  நல்ல மதிப்பெண்கள் வாங்குவதோடு,  மருத்துவ படிப்புக்கு இன்றியமையாத  தகுதிகளான   சகிப்புத்தன்மையும், அசூயைப்படாமையும  அவனுக்கு  இயற்கையாகவே  அமைந்திருந்தது..     .

 எங்களுடைய  நண்பர்களில்,  சில அநுபவஸ்தர்கள்   CBSE  யைவிட,   கர்நாடகா PUC யில் மதிப்பெண்கள் நிறைய வாங்கலாம், மருத்துவக் கல்லாரியில் இடமும் இலகுவாக கிடைக்குமென்று  அறிவுரை  கூறினர்.

      தெரிந்தவர்கள் சொல்கிறார்களே  என்று  அப்படியே  கடைபிடித்து, அவ்வளவு  நல்ல  பள்ளியின் அனுமதியிடத்தை வேண்டாமென்று சொல்லி   விட்டோம்.  அப்பொழுதெல்லாம்  இணையம்  பரவவில்லை. அதனால் அவ்வளவு சுலபமாக நாம் எல்லா விஷயங்களும் தெரிந்துவைத்துக் கொள்ள முடியாது. அனுபவமுள்ளவர்கள்  சொல்வதையும், செய்தித்தாள்களையும்  தான் நம்ப வேண்டும்.

     10ம் வகுப்பு முடிவும் வந்தது. அவனளவுக்கு ரொம்ப நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். கல்லூரிகளில் 11 ம் வகுப்புக்கு அப்ளை செய்தோம்.

     கல்லூரிகள் அனுமதிப்பை 3 தரப் பட்டியலில்  வெளியிடுவார்கள.  மிகுந்த நம்பிக்கையோடு முதல் பட்டியலில் அவன் பெயரைத் தேடினால், வரவில்லை.  அதுமட்டுமில்லாமல், கட்-ஆஃப்  மதிப்பெண்கள்  98% ல் இருந்தன. முதல் முறையாக பயப்பட ஆரம்பித்தோம். ஏனென்றால் இன்னும் 10  நாட்களில் கல்லூரி ஆரம்பித்து விடும். எதாவது ஒரு இரண்டாந்தர  கல்லூரியில் அதுவும் சிபாரிசுடனோ அல்லது  அன்பளிப்புடனோ  தான்   இடம் கிட்டும்.

      இரண்டாம் பட்டியலிலும் பெயர்  வராமல், 11 வதுக்கே விழி பிதுங்கி, வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டி ,கடைசியில்  3ம் பட்டியலில் பெயர் வந்து பழமைவாய்ந்த, புகழ்பெற்றவர்கள்  படித்த   நல்ல  கல்லூரியில்  பியூசி சேர்ந்தான். சரி இனிமேல் அடுத்தது மருத்துவக் கல்லூரி வாசல் படி தான் ஏறப் போகிறான் என்ற சந்தோஷத்தில் அவனது கல்லூரி நாட்கள் ஆரம்பித்தது. 2 ஆண்டுகள் வீடு ,கல்லூரி, சிறப்பு வகுப்புகளி்ல்  உருண்டோடி  விட்டன

      7 ஆண்டுகள் தொடர்ந்து  கர்நாடகா பள்ளியில் படிக்காதவர்கள், கல்லூரி சேர்க்கையின்போது  வேறு மாநிலத்தவர் பிரிவில் தான் வருவார்கள்.  என் மகனுக்கு 5 வருடம் தான் ஆகியிருந்தது. 

     அவன்  12வது முடித்த ஆண்டுக்கு முன் ஆண்டு வரை கர்நாடகாவில், வெளி மாநில மாணவர்களுக்கு என்று 10% மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரியில்  இட ஒதுக்கீடு  இருந்தது. சில அரசியல்வாதிகள் கல்லூரிகள் ஆரம்பித்து  அதிலுள்ள லாபத்தை அநுபவித்ததால், வெளி மாநிலத்தவர்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில்  ஏன்  இடம் கொடுக்கணும்  என்று,  நீதி  மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாணவர்களின்  நுழைவுத் தேர்வின் போதே  இந்த வழக்கு நடந்தது

       2 மாதங்கள் வரை தினமும் செய்திகளில் முதல் இடம் இந்த பிரச்னைக்குத்தான். வழக்கு முடிவுக்கு வராமல்  கல்லூரிச்சேர்க்கை ஆரம்பிக்க முடியாது. உள்ளூர் மாணவர்களும் சேரமுடியாது.

  ஜூலையில்  திறக்க வேண்டிய கல்லூரிகள் அக்டோபர் வரை கோர்ட்டின் முடிவுக்கு காத்திருந்தன. 5 மாதம்  இந்த வருடம் அவன் கல்லூரி போவானா மாட்டானா என்று தெரியாமல் கழிந்தது.
   

    கடைசியில் தீர்ப்பும் வந்தது. அந்தத் தீர்ப்பில் அரசுக் கல்லூரிகளில்  இவர்களுக்கு  இடம் கிடையாது என்றும், வேண்டுமென்றால் சுயநிதிக் கல்லூரிகளில் சேரலாம் என்றும்  நீதிமன்றம் தீர்ப்புக் கூறி, வெளி மாநிலத்தவர்களுக்காக கட்டணமும்  நிர்ணயித்தது.   மருத்துவத்திற்கு ரூ   2.25  லட்சம், பொறியியலுக்கு ரூ 1.10 லட்சம்  வருடாந்திர கட்டணம்.

   மே மாதம் முதல் தினமும் செய்திகளில் இந்த மாணவர்களின் எதிர்காலம் தான் விமர்சிக்கப்பட்டன
 
     என் மகனின் கர்நாடகா நுழைவுத்தேர்வு  CET  ராங்க் பொறியியலில் 40, மருத்துவத்தில் 70  அவன் 12 வதில் CBSE லேயே இருந்திருந்தால் IIT  அல்லது AIEEE  நுழைவுத் தேர்விலாவது  நல்ல ரேங்க் வாங்கியிருப்பான்.    



  இத்தனைக்கும் அவன் கர்நாடகாவில் 7 ம் வகுப்பிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறான். இவர்கள் நுழைவுத் தேர்வில் மாற்றம் கொண்டு வர நினைத்தால்  அதை  முன்பே செய்திருக்கலாம். என்னத்தச் சொல்ல!

  
     இந்த  முடிவு  வரும்போது  மாணவர்களுடைய மற்ற எல்லா பல்கலைக்கழக  நுழைவுத்தேர்வுகளும்  முடிவடைந்து விட்டன.
எல்லா பொறியியல் கல்லூரிகளும் 10% இட-ஒதுக்கீட்டில் அதிக கட்டணத்துடன் பிற மாநில மாணவர்களை சேர்த்துக் கொள்ள சம்மதித்தன .ஆனால் சில புதிதாக தொடங்கப்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்தான் பிறமாநிலத்தவர்களுக்கு இடம் கொடுக்க சம்மதித்தன. அதுமாதிரி கல்லூரியில் சேர்க்க பயமாக இருந்ததால் அவனுடைய கனவான மரு்துவப் படிப்பை விட்டு, கர்நாடகாவின் முதல் இடத்திலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்தோம்.  ஒரு வருடம் முன்பு வரை வெறும் 8500/-Rs  ஆக இருந்த  பொறியில் கல்லூரி  வருடக் கட்டணம் 1.25 லடசம் ரூ வரை ஆனது   
    ஆனால் நான் இந்தப் பதிவை எழுதுவதின் நோக்கம்  இது மட்டுமில்லை.

   . என் பையன்  மின்னணுவியலில்  BE  பட்டம் பெற்று, பெரிய  MNC யில்  2 வருடம்  நிறய சம்பளத்துடன் வேலை பார்த்தான் .  இருந்தாலும், மேலே படிக்கவேண்டும் என்று  நல்ல வேலையை விட்டு விட்டு தன்  சொந்த முயற்சியால் , ஜெர்மனியில்  உதவித்தொகையுடன்  MS முடித்து,  இப்போது அமெரிக்காவில்,   பிரசித்தி பெற்ற  Ivy League  யூனிவர்சிடிகளில்  ஒன்றில்  Humanoid ல் PhD பண்ணுகிறான். அங்குள்ள  மாணவர்களுக்கு பாடமும்  நடத்துகிறான்  சில சமயம். 

  குறைந்த மதிப்பெண் வாங்கினால்,  நினைத்த கல்லூரியில்,  நினைத்த படிப்பு கிடைக்காவிட்டால், என எல்லாவற்றிற்கும் தாமும் கலங்கி குழந்தைகளையும் கலங்கடிக்கும் பெற்றோர்களே!  படிக்கிற ஆர்வமும் அறிவை வளர்க்க வேண்டுமென்ற  ஆசையுமிருந்தால்  எந்த குழந்தையோட  எதிர்காலமும்  வீணாப் போகாது.  எப்படியும் முன்னேறிவிடுவார்கள். அந்த
ஆர்வத்தை கொன்று விடாதீர்கள்

  

.