Monday 17 March 2014

                                                        

                                                         ஹோலி ஹை!!



    ப்ரஹலாதனைப் பற்றியும் ஹிரண்யகசிபுவைப் பற்றியும் நம் எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.நமக்கு தெரியாத ஒரு கதையை வட இந்திய புராணங்கள் சொல்கிறது.

   ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதனைக் கொல்ல முயன்ற ஒவ்வொரு முறையும் நாராயணன் காப்பாற்றி விடுகிறார். அப்பொழுது ஹிரண்யகசிபுவின் சகோதரி ஹோலிகா என்பவள் தன் சகோதரனுக்கு உதவ வருகிறாள்.

    அவளும் மாயாசக்தி உடைய அரக்கியே. அவள் சொக்கபானை ஒனறின் மேல் அமர்ந்து, ப்ரஹலாதனிடம் நைச்சியமாக பேசி அவளது மடியில் உட்காரும்படி செய்கிறாள்.

     அவள் தன் மாயா சக்தியால் நெருப்பில் எரியாத ஒரு கம்பளிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு, சொக்கபானைக்கு நெருப்பு வைக்கச் சொல்கிறாள்.

      உடனே நாராயணன் அருளால் அவள் மேல் இருந்த கம்பளி பறந்து சென்று ப்ரஹ்லாதன் மேல் மூடி அவனை பிழைக்க வைக்கிறது.

      நெருப்பில் ஹோலிகா எரிந்து சாம்பலாகி விடுகிறாள்.  இந்த நிகழ்ச்சியே ஹோலி என்று அவள் பெயரில் கொண்டாடப்படுகிறது.

       ஹோலிப் பண்டிகையின் முதல் நாள் இரவு ,அதற்காக குறிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில்,  பூஜை செய்து,தானங்கள் கொடுத்து, பின்  நம் ஊரில் கார்த்திகைக்கு எரிக்கும் சொக்கபானை போன்று செய்து, அதில் ஹோலிகா மற்றும் ப்ரஹ்லாதனின் உருவங்களை வைத்து கொளுத்துவார்கள்.

     அந்த சாம்பலை பத்திரமாக வீட்டில் வைத்திருப்பார்கள். மார்வாடிப் பெண்கள் அன்று விரதம் இருந்து ஹோலிகா எரிந்த பின் தான் சாப்பிடுவார்கள்.

      இந்த நாளை,  தீயதை நல்லது வென்ற நாளாக எல்லா மதத்தினரும் கொண்டாடுகிறார்கள்.
   
  .நண்பர்களுக்குள் மனஸ்தாபம் இருந்தால் கூட ஹோலியன்று ஒருவருக்கு ஒருவர் குலால் பூசி சமரசமாகி விடுகின்றனர்.

    இனிப்பும், காரமும் நம் தீபாவளியை மிஞ்சும் அளவுக்கு செய்வார்கள்

  இப்படியாக் கொண்டாடப் பட்ட ஹோலி இன்று  சமூக விரோதி இளைஞர்களால், வெறும் தடையின்றி குடிப்பதற்காகவும், மற்ற வீட்டுப் பெண்களை எதிர்ப்பின்றி தொட்டு வண்ணம் பூசுவதற்காகவுமே கொண்டாடப் படுகிறது.
    
      20 வருடம் முன்பு பெண்களும் தெருக்களில் ஒருவர் மீது ஒருவர் வண்ணம் பூசி சந்தோஷமாக கொண்டாடினார்கள். இப்போது எந்தப் பெண்ணும்  ஹோலியன்று தனியாக வெளி வேலைக்குக் கூட செல்ல முடியாது.

         ஒவ்வொரு தெருவிலும் இன்று ஹோலிகா பேன்ட-சட்டையுடனோ அல்லது அதை விட கேவலமான ஒரு துணியுடனோ தெரு முனையில் நிற்க வைக்கப்படுகிறாள்.

       அரக்கி அவளா? இல்லை அரக்கர்கள் இந்த இளைஞர்களா?
 

                            ஹோலியாம் ஹோலி!!!

Monday 3 March 2014

                             வரமா சாபமா

    தூரம் குழந்தைகளை நம்மிடமிருந்து பிரிப்பதே இல்லை.அதுவும்  காலை 6 மணிக்கு கணினிக்கு சுப்ரபாதம் பாடி, நடு இரவு தாண்டியும் அதற்கு தாலாட்டுப் பாடாத இந்த இணையக்குடுத்தன யுகத்தில், நிச்சயமாக இல்லை.



        2 மகன்களில் பெரியவன் வெளிநாட்டில், சின்னவன் வெளிமாநிலத்தில் .காலையில் கண்விழித்ததும், ஜி.மெயிலிலோ அல்லது ஸ்கைப்பிலோ என் மூத்த பையனை பார்ப்பதே போதும், அவன் எங்க கூடவே தான் இருக்கிறான் என்ற மாயையில் காலத்தை ஓட்ட.


    அவன் அங்கே தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், நமக்காகத்தான் ஆன்லைனில் இருக்கின்றான்  என்ற நினைப்பில் வாழ்க்கை ஓடுகிறது.


     என் போன்ற செல்போன் அடிமைகள் உள்ள காலத்தில் அதை அலர்ஜியாக நினைப்பவன் அவன். மேலும் அமெரிக்காவில் யாருக்கு போன் பண்ணப் போகிறேன், கொஞ்ச நாள் கழித்து வாங்கிக்கொள்கிறேன் என்று மடிக்கணினியே சகலமும் என்று இருப்பவன்.அவனுடைய ஒவ்வொரு நாளின் வாழ்க்கையை எங்களுடன் பகிர்பவன்.
  
      அவன் அறை நண்பர்கள் கிருஸ்துமஸ்  விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்று  விட்டதால்  தனியாக  இருக்கிறான்.

     போன மாதம் ஒரு நாள்,பனிப்புயலால் அமெரிக்கா கலங்கிக் கொண்டிருந்த நேரம்.  கண்விழித்திருக்கும் நேரம் எல்லாம் ஆன்லைனில் இருக்கும் மூத்தவன் அன்று வரவில்லை.

.
    லேப்  இ்ல் இருக்கிறானோ இல்லை எதாவது வேலையில் பிஸியோ என்றும் மதியம் அல்லது இரவு ஆன்லைனில் வருவான் அல்லது மற்ற சமயம் போல ஜம்ப்ளோ மூலமாக போனில் தொடர்பு கொள்வான் என்று காத்திருந்தோம். மாலையும் போய் இரவும் வந்தது, அவன் வரவில்லை.


      நானும் ட்விட்டரில் மறைமுகமாக விசாரித்துப் பர்த்தேன், ஒருக்கால் ரோட்ஸ் ஐலேண்ட், ப்ராவிடன்ஸில் கரண்ட் இல்லையோ என்று. ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இணையத்தி்ல் அவனுடைய நகரத்து செய்திகளில், அவன் பல்கலைக்கழக மாணவனே காரோடு காணவில்லை  என்றும், யாரும் வெளியில் செல்லவேண்டாம் என்றும் அரசின் எச்சரிக்கையை வாசித்ததில் கலக்கம் தான் அதிகரித்தது. எபபடியோ தூக்கம் வராமல் இரவை ஓட்டினோம்.
   
 
    அடு்த்த நாள் விடிந்ததும் அதே நிலைதான். போனை கையிலேயே வைத்துக்கொண்டும்,  இன்டர்நெட்டையும் ஆன் பண்ணி வைத்துக் கொண்டு வருவானா வருவானான்னு காத்திருந்து  அடுத்த நாளும் முடிந்தது. அந்த தவிப்பையும் பட்டபாட்டையும் அனுபவித்தால்தான் உணரமுடியும்.


    இரவு 1 மணிக்கு அவன் ஆன்லைனில் வந்தான்.  இன்டர்நெட்டில் தான் ஏதோ பிரச்சினை எனறான். பனிமழையும் சூறாவளியும் தாக்குவதால் தொடர்பு அறுந்துவிட்டது, பிறகு சரியாகி விட்டது என்றான். நாங்கள் பட்டபாட்டைச் சொன்னதும் தவறு எங்கள் மேல் தான், 2 நாள் பேச முடியாவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது? என்று எங்களைத் தான் கேட்டான்.அந்த சமயத்தில் அவனைக் கண்ணால் பார்த்து பேசியதே உலகின் எல்லா துக்கத்தையும் அடித்துக் கொண்டு போய்விட்டது.

    அடுத்த நாள் அவன் மேல் முதலில்  கோபமாகத் தான் வந்தது .எங்களின் வருத்தமறியாத பிள்ளையாக இருக்கிறானே என்று .ஆனால்  நிதானமாக யோசித்துப் பார்த்தால் அவன் சொல்வதும் சரியே.  அந்த நாட்களில் உள்நாட்டிலேயே நான் ஊருககுப் போய்ச் சேர்ந்து போட்ட கடிதம் என் பெற்றோர்களுக்கு கிடைக்க ஒரு வாரமாகும். வெளி நாட்டிலோ ஒரு மாதம் கூட ஆகியிருக்கலாம்.  என் பெறறோர்  எப்படித் தான் இருந்திருப்பார்களோ?

    என் மகன் சொல்வதைப்போல, இந்த தகவல் தொடர்பு புரட்சி நம்மிடம்  இருந்த  தைரியத்தை பறித்துக் கொண்டு  நம்மை அதற்கு அடிமையாகவும்  கோழையாகவும்  தான் ஆக்கியுள்ளது.
                 
                              இது நமக்கு வரமா சாபமா ?யோசிங்களேன்.