Tuesday 18 October 2016


                 பிருந்தாவனமும் நந்தகாவும்


             " நம்ம கார் மட்டும் தானியங்கியா - தானாவே ஓடி, போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு போக முடியும்னா, நேரப் போய் எதாவது ஒரு கோயில்ல தான் நிற்கும்" - இது என் பசங்களோட கமன்ட்,  ஒவ்வொரு முறை கோயிலுக்குப் போகும் போதும்.
    

   ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் பண்ண ஆரம்பித்ததிலிருந்து, 106  திவ்ய தேசங்களையும் சேவிக்க ஆவல் அதிகமானது. ஆனால், சோழநாட்டு திருப்பதிகளும், சில பிரபலமான திருப்பதிகளும் தான் இதுவரை பார்க்க முடிந்தது. இப்ப வடநாட்டில் வசிப்பதால் , இந்த தடவை பையன்கள் வரும்போது  வடநாட்டு திவ்யதேசங்களை ஒவ்வொரு இடமாக பார்க்க திட்டம் போட்டோம். அதன்படி முதலில் போனது வடமதுரை.

      வட மதுரை -  மங்களாசாசனம் -> ஆழ்வார்கள் -> பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார். மொத்தம் 50 பாசுரங்களால் பாடப்பெற்ற திருத்தலம் .


 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய    பெருநீர் யமுனைத் துறைவனை  ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்  தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் -திருப்பாவை

                                                          

ரயிலில் மதுரா சென்று, அங்கிருந்து பிருந்தாவனத்திற்கு ஆட்டோவில் சென்றோம். 150-200 க்குள் ஆட்டோ கிடைக்கிறது .
     மதுரா சுத்தமாக இருக்காது,  என்பதால் நேரே பிருந்தாவனம் போய்விட்டோம். பிருந்தாவனத்தில் ட்ரஸ்ட்களால் நடத்தப்படும் நிறைய கெஸ்ட் ஹவுஸ்கள் உள்ளன. தரமும் நன்றாகவே உள்ளது. விலையும் மதுராவை விட குறைவே.  'போஜனாலய் என்ற வெங்காயம்,பூண்டு கூட சேர்க்காத வட இந்திய தாலி - சாப்பாட்டு இடங்களும் உள்ளன.  மசாலா வகையறாக்கள் இல்லாத, அளவில்லாத,   சாத்வீகமான  உணவு இங்கு கிடைக்கிறது. போகுமிடத்தில் இருக்க நல்ல இடமும், சாப்பாடும் சரியாக இருந்தால் தான் நம்மால் இடங்களை பார்த்து ரசிக்க முடியும்.

      குறைந்தது 3 நாட்களாவது இருந்தால் தான் நாம் கண்ணன் பிறந்து, இடம் மாறி, விளையாடி அதிசயங்கள் நடத்திய இடங்களை பார்த்து முடிக்க முடியும்.

     விருந்தாவன் ஊரே பக்தியில் பொங்கி வழியுது. நாங்கள் முதலில் போனது 'பாங்க்கே பிஹாரி மந்திர்'.  இது தான் பழமையான கோயில். சாதாரண நாட்களில் கூட கூட்டம் நெருக்கி அடிக்கிறது. விசேஷமான நாட்களில் தள்ளு முள்ளு தான்.  இங்கு ஸ்வாமி ஹரிதாஸ் அவர்களால் 1862 ல் கண்டெடுக்கப்பட்ட கிருஷ்ண விக்ரஹம் உள்ளது. பாங்க்கே எனும் சொல்லுக்கு ‘ மூன்றாக வளைந்த’ என்றும், பிஹாரி எனும் சொல்லுக்கு ‘தெய்வீக ரசிகர்’ என்றும் பொருளாகும். இந்த பெயருக்கேற்பவே இக்கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலை மூன்றாக வளைந்த திரிபங்கா கோலத்தில் காட்சியளிக்கிறது.  இவ்வளவு கூட்டத்தில் பார்த்ததாலோ என்னவோ கண்ணன் முகம் பிடிபடவேயில்லை. 10 நிமிடத்திற்கு ஒருமுறை திரை போட்டு விடுகிறார்கள். திரை திறந்து  2,3 நிமிடம் கழித்து மறுபடி மூடி விடுகிறார்கள். தென்னிந்திய கோவில் போல் வரிசை எல்லாம் கிடையாது. கும்பலாக உள்ளே சென்று தூரத்திலிருந்த படி தான் கண்ணனை காண முடியும்.
                                                 





                                     

               பாங்கே  பிஹாரி Bhanke Bihari  மந்திர் பிருந்தாவனம்

                                                          
பக்தர்களின் பக்திக்கு குனிந்து வளைந்து செவி மடுப்பதால் அவன் 'பாங்க்கே பிஹாரி ' . கோயிலுக்குப் போகும் வழியெங்கும் சாட், பானி பூரி கடைகளும், தூத் பேடா கடைகளும் தான். கண்ணன் நமக்கு கண்ணுக்கு, ஆத்மாக்கு உணவா வரேன்னு குனிஞ்சு காத்திருந்தாலும், நமக்கு நாக்குக்கும் வாய்க்கும் கிடைக்கப் போகும் உணவு தானே பிரதானம்.

     அதற்கு பக்கத்திலேயே உள்ளது ( 2 கிமீ ) யமுனா காட்  YAMUNA GHAT என்னும் யமுனைக் கரை. கண்ணன் கோபிகளின் துகிலுரித்து, காளிங்க நர்த்தனம் ஆடிய இடங்கள். பழைய காலத்து கட்டடங்கள் வழியாக பரிக்ரமம் பண்ணலாம் . மாலையில் 6 - 6:30 யமுனா ஆரத்தி அற்புதம். என்ன ஒண்ணு , சின்ன சின்ன குழந்தைகள்  அகல் விளக்கு வாங்கிக்கோங்கன்னு செய்யும் தொந்தரவு தான் தாங்க முடியவில்லை. 5,6 வயசு  குழந்தைகளை அப்படி விற்க அனுப்பிய பெற்றோர்களைப் பற்றி என்ன சொல்ல ?

                                                              

யமுனா ஆரத்தி - பிருந்தாவனம்



Chir Ghat சீர் காட் - பிருந்தாவனம்


 
     யமுனைக் கரையிலேயே உள்ள 'சீர்காட்' CHIR GHAT டில் கண்ணன் குளிக்க வந்த கோபிகளின் துணிகளை கட்டி வைத்த கதம்ப மரம் உள்ளது. இந்த மரத்தின் அடியில் உள்ள காத்யாயினி தேவியின் கோயிலில், கோபிகள் நிதமும், நீராடி விட்டு கண்ணனை அடைவதற்கு காத்யாயினி தேவியின் அருளை வேண்டினர். இதன் அடிப்படையில் தான் நம் ஆண்டாளும் பாவை நோன்பு அனுசரித்தது.


                                                         
                                                   

                                  கதம்ப மரம் - பிருந்தாவனம்



      இங்கு இருக்கும் படித்துறையில் தான் கண்ணன் குதிரை வடிவில் வந்த கேசி என்ற அரக்கனின் காலை பிடித்து சழற்றி வானில் எறிந்து துவம்சம் செய்த 'கேசி காட்'டும் KESI GHAT இருக்கு.

                                                   
                                               

                            கேசி காட் Kesi Ghat - பிருந்தாவனம்

    
      நதிக்கரையில் - பரிக்ரமா மார்க்  PARIKRAMA MARG - வலம் வரும் வழி உள்ளது. நடப்பதற்கு சக்தி மட்டும் இருந்தால் அரண்மனை மாதிரி உள்ள படித்துறைகளின் வழியே யமுனையின் கூடவே நாமும் நடந்து கொண்டே இருக்கலாம்... அப்படி ஒரு தெய்வீக உணர்வு நம்முள் எழுகிறது, அங்கு வலம் வருபவர்களைப் பார்த்தால். 

                                         

                                 விளக்கு விற்கும் குழந்தைகள்

                                                          
    
     புராதன கோயில்களே எக்கச்சக்கமாக உள்ள இடத்தில், புதியதாக ISKON மந்திர், ப்ரேம் மந்திர் என்று வண்ண வண்ண விளக்குகள், ஆடம்பரங்களுடன் சுற்றுலாத் தலங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பிடித்தவர்கள் அங்கெல்லாம் வேடிக்கைப் பார்க்க போகலாம். மனதுக்குள் இம்மியும் இறங்க முடியாத, கண்ணை மட்டும் கவரும் இடங்கள்.

                                               










                                 ப்ரேம் மந்திர் - பிருந்தாவனம்


        அடுத்த நாள் நாங்கள் சென்றது நிதிவனம். கண்ணன் விளையாடிய இடம். இங்கு தினமும் இரவில், கண்ணன், ராதை மற்றும் கோபிகளுடன் நடனமாடுவதாக மக்களால் நம்பப்படுகிறது. இங்கு உள்ள பாங்கே பிஹாரி  கோவில் தான் புராதனமான கோவில் என்றும் சிலர் சொல்கிறார்கள். வன துளசி மரங்களால் ஆன சிறிய காட்டில் நடந்து செல்வதே அற்புதமாக இருந்தது. புழுதியாக உள்ள மண்ணில்,வரண்ட மரக்கிளைகளில் பச்சை பசேல் என்ற இலைகள் வருடம் முழுவதும் எப்படி என்பதே ஆச்சர்யமான ஒன்று. இங்கு உள்ள பாங்கே பிஹாரி மந்திரில் கண்ணன் ராதை விக்ரஹங்கள் உள்ளது.


       


                                    நிதி வனம் - பிருந்தாவனம்



     பிருந்தாவனத்தில் நாம் கண்டிப்பாக பார்க்க வேண்டியது ரங்காஜி மந்திர். நுழை வாயில் மட்டும் வட இந்திய பாணியில் உள்ளது. மற்றவை எல்லாம் - கோபுரம், பிரகாரங்கள், மூர்த்தி, வழிபாட்டு முறை எல்லாமே தமிழர்கள் முறை தான். ப்ரஹ்மோத்சவம், கருட சேவை எல்லாமே பங்குனி மாதத்தில் நடைபெறுகிறது.

     கி.பி 1845 ல் ஆரம்பித்து கி.பி 1851 ல்  நம் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரங்கதேசிக ஸ்வாமிகளால் கட்டி முடிக்கப் பட்டதாம் ஆண்டாள் ரங்கமன்னார் கோவில்.. அங்கு இருப்பது Godha-Rangamannar. நம் ஆண்டாளுடன் ரங்கமன்னார். பூஜை செய்பவர்கள் நம் ஊரிலிருந்து போனவர்கள் தான். ராமானுஜர், கூரத்தாழ்வான், மற்ற ஆசார்யன் சன்னதிகளும் இங்கு உண்டு. பட்டாச்சாரியார் - குருக்களிடம் உள்ளே மூலஸ்தானம் வரை செல்ல விருப்பம் தெரிவித்தால் ஆண்களுக்கு வேட்டி கொடுக்கிறார்கள். கட்டிக்கொண்டு ஸ்வாமியை அருகே சென்று சேவிக்கலாம். பெருமாளும் ஆண்டாளும் அவ்ளோ அழகு.

                                                    




       

                               ரங்காஜி மந்திர் - பிருந்தாவனம்


       மாலை கண்ணன் பிறந்த இடத்தைப் பார்க்க மதுரா புறப்பட்டோம். கண்ணன் பிறந்த சிறைச்சாலை தான் கிருஷ்ண ஜன்ம பூமி. எப்பொழுதும்  ஒரே கூட்டம் தான். ஆனால் பெரிய வாயில் , சொல்ல முடியாத அளவு கெடுபிடி, பாதுகாப்பு உள்ளதால் இங்கு நாம் நிதானமாக கண்ணன் பிறந்த இடத்தையும், அங்குள்ள கண்ணனையும் சேவிக்கலாம்.
 



                     மதுரா - கண்ணன் பிறந்த இடம் photo by google


       இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று, கண்ணன் கோவிலின் கோபுர கொடியும் , அடுத்து ஒட்டியே உள்ள மசூதியின் கொடியும் ஒரே நேர்க்கோட்டில் அசைந்தாடுவது நம் நாட்டில் தான் பார்க்க முடியும். 'மேரா பாரத் மஹான்' தான்.

   மறுநாள் நாங்கள் 3 பேர் தான் என்பதால் ஆட்டோவிலேயே நந்தகாவ், கோகுல், ரமண் ரேதி, ராதா குண்ட், குசும் சரோவர், கோவர்தனம் வரை போனோம்.

     முதலில்  - Nandgaon . நந்தகாவ் பிருந்தாவனத்திலிருந்து சுமார் 35 கிமீ தூரத்தில் உள்ளது. நந்தகாவ் என்பது நந்தகோபரின் வீடு, பலராமர் மற்றும் லோகமாயா பிறந்த இடம். கண்ணன் வளர்ந்த இடம். அறிவு பூர்வமாக பார்த்தால் இதெல்லாம் நம்ப முடியாமல் போகலாம். ஒரு யுகமே கழிந்துவிட்டது இதெல்லாம் நடந்து.  ஆனால் அங்கு போன போது மனசு அடையற பரவசத்தை சொல்லி மாளாது.

       

பலராமர் மற்றும் லோகமாயா பிறந்த இடம்



     அடுத்து பார்த்த இடம் 'ரமண் ரேதி ' ரமண் = வசீகரம் ,மோகனம். ரேத் = மணல். கண்ணன், பலராமனுடன் மாடு மேய்த்த இடம். ராதை, கோபிகளுடன் விளையாடிய இடம். லீலைகள் செய்த இடம். இங்கு  உள்ள மணலில் , அந்த மணல் தம் உடம்பில் ஒட்டவேண்டு மென்று பக்தர்கள் விழுந்து புரள்கிறார்கள்.

                                                    


                                                 ரமண் ரேதி


      

     அங்கிருந்து கோவர்த்தன மலையை வலம் வந்தோம். 23 கி.மீ தூரத்தை மக்கள் நடந்தே பாத யாத்திரை போல் வலம் வருகின்றனர். நடக்க முடிந்தால் நல்ல அனுபவம். கோவர்த்தனம் அல்லது கிரிராஜ் குன்றை, கிருஷ்ணனின் இயற்கை வடிவமாக இங்குள்ளவர்கள் வணங்குகின்றனர். வலம் வரும் வழியிலேயே 'கோவர்த்தன சிலா' உள்ளது. கோவர்த்தன குன்றின் ஒரு பாறை அது.அதையும் வணங்கிக் கொள்ளலாம்.

                           



                                        கோவர்த்தன மலை


     
              அதன் பிறகு குசும் சரோவர், ராதா குண்ட் போன்றவற்றை பார்த்து விட்டு மதுராவிடமிருந்து விடை பெற்றோம்.

                                                        

                                                    குசும் சரோவர்





     பின்குறிப்பு - 1.மதுரா,பிருந்தாவன்,போன்ற பெரிய கோவில்களில் எந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் அனுமதி கிடையாது.வெளியில் மட்டும் தான் போட்டோ எடுக்க முடியும். எல்லாவற்றையும் செக்யூரிடி இடத்தில் விட்டுச் செல்ல வேண்டி வரும்.தவிர்க்க முடிந்தால் நல்லது.

2.குரங்குகள் ராஜ்ஜியம் தான். எந்தப் பொருளையும் கையில் எடுத்துப் போகாதீர்கள். சாப்பிடும் பொருட்கள் மட்டுமல்ல ,கேமரா,பர்ஸ்,போன் கூட பிடுங்கிக் கொண்டு போய்விடுகின்றன. சில மாதங்கள் முன்பு ஒரு பெண்ணின் பர்சை பறித்துக்கொண்டு போய் பணத்தை வாரி இறைத்த போட்டோக்கள் செய்தித் தாளில் வந்தது.

3.நம் சாப்பாடு கிடைப்பது கஷ்டம் தான்.போஜனாலய் போன்ற இடத்தில் ஓரளவு தரமான சாப்பாடு கிடைக்கிறது. இட்லி,தோசை மற்றும் Fast food எல்லா இடத்திலும் கிடைக்கின்றன.உத்தரபிரதேசம் யாதவர்கள் இடம்.பால் பொருட்கள்,sweet கள் ஏராளம். மதுரா தூத் பேடா - பால் கோவா அவசியம் வாங்கி வர வேண்டிய ஒன்று.

4.ஹிந்தி தெரியலைனா டாக்சி, ஆட்டோகாரர்கள் ஏமாத்தப் 

 பார்ப்பார்கள்.எச்சரிக்கை அவசியம்.

5. கோகுல் கோயிலில் நாங்கள் போகும்போது,அங்கு இருந்த 'பாண்டா' பூஜாரி திரை போட்டுவிட்டு, அங்கிருக்கும் 'கோசாலை'- மாட்டுக்கொட்டகைக்கு தானம் செய்யச் சொல்லி அரை மணி கதையளந்தார். பாவம், பயபக்தியுள்ள ஜனங்கள்,100-500 வரை தட்டில் போட்டனர். அத்தனை பேரும் போடும் வரை அவர் ஸ்வாமியை கண்ணில் காட்டவில்லை. இது போல் பல இடங்களில் நடக்கிறது.சாமி காணிக்கை,பக்தி எல்லாம் நமக்கும் சாமிக்கும் இடைப்பட்டது. இதில் கொள்ளையடிக்கவே வட நாட்டில் பாண்டா கும்பல்கள் உள்ளது. யாரிடமும் பேச்சு கொடுத்து மாட்டக்கூடாது.



 மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
 

நன்னறையூர் நின்ற நம்பியை  வம்பவிழ்தார்
 

கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார் 

பொன்னுலகில் வானவர்க்குப்     

புத்தேளி ராகுவரே   -   திருமங்கையாழ்வார்



                          கிருஷ்ணார்ப்பணம்.  


                                                      
                                                                  

                              

                                             
                                                          



                                                

Sunday 19 June 2016

                                தாயும் சேயும் ...


                 இன்று காலை மிகவும் மங்களகரமாக விடிந்தது.

      எங்கள் தெருவில் நிறைய மரங்கள் இருப்பதால், அக்கம்பக்கத்து பசுமாடுகளுக்கு ரிலாக்ஸாக அசை போட தோதான இடமாக ஆகி விட்டது.


     மாடுகள்லாம் கொட்டாய்களில் அடைந்திருந்தது 20ம் நூற்றாண்டில் வேணா இருக்கலாம். இப்பொழுதெல்லாம் போராடாமலே அதுங்களுக்கு சுதந்திரம் கொடுத்து,  தண்ணி தெளித்து துரத்தியாயிற்று.

     கறக்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுதும் அங்கிங்கெனாதபடி அது எங்க வேணா திரியலாம். அதுவும் இரவு 10 மணிக்கு மேல் மெயின் ரோடின் நடுவில் தான் ஒரு 10 மாடு கும்பலா, ரிலாக்ஸா, ரெஸ்ட் எடுக்கும். ஊருக்கு புதுசா யாராவது வந்து,  இராத்திரில கார் ஓட்டினாங்களோ... பகல்ல பாத்த அதே  ரோடு தான்னு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டாங்க. மாட்டு மந்தையாகி இருக்கும் ரோடு.


         எங்க ஊர் கவர்ன்மென்ட் என்ஜினியரிங் காலேஜ்ல , பசங்களுக்கு காலைல கல்லூரி போனதும் முதல் வேலை கிளாசிலிருந்து மாடுகளை துரத்தி, சாணி அள்ளுவது தான். இது ஜோக்கில்ல. உண்மை.


     இப்படி வழக்கமா எங்க தெருவுக்கு வர்ற மாடுகள்ல ஒண்ணுக்கு நேற்று பிரசவவலி.  இராத்திரி பூரா தவிச்சிருக்கு பாவம். விடிகாலைல நல்லபடியா பிரசவம் ஆகி தாயும் சேயும் நலம்.

     நாங்க அம்மா மாட்டுக்கு கோதுமை மாவு, வெல்லம், வாழைப்பழம், தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினதும் அதுக்கு தெம்பு வந்தது. கன்றும் பால் குடிக்க ஆரம்பித்து விட்டது.

     இதல கொடுமை என்னன்னா மாட்டுக்கு சொந்தக்காரன் காலைல 11 மணி வரை கூட வரலை.  அப்புறம் நாங்க வேலைல பிசியாகிட்டோம். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் மாடு கன்று இரண்டையும் காணோம்.

     சினை மாடு எப்ப கன்னு போடும்னு , மாட்டைப் பார்த்தாலே சாதாரணமானவங்களுக்கே கொஞ்சமாவது விளங்கும். கிராமங்களில் 1,2 மாடு உள்ளவர்கள் கூட, மாடு கன்னு போடப் போகும் நாட்களில் ஊருக்கு கூட போக மாட்டார்கள். பிரசவத்தில் என்ன வேணா நடக்கலாம். சில முதலுதவியெல்லாம் கூட செய்யவேண்டி வரும். அந்த அளவுக்கு கூட கரிசனம் இல்லாத என்ன  ஜன்மங்களோ.  ஊர்ல , தெருவுல பிளாஸ்டிக்கயும், பேப்பரையும், அழுகின காய்களையும் மேய்ந்துட்டு வந்து, பாலால பாத்திரம் நிரப்பினா சரி. அவர்களுக்கு வேண்டியது காசு. நமக்குத் தான் இது புதுசோ என்னவோ? பண்ணைல உள்ள எல்லா மாடுமே இப்படித் தான் கன்னு போடுதோ என்னவோ?

    

    



Saturday 13 February 2016

                             சமர்ப்பணம்-2


 

முதல் சமர்ப்பணம் இங்கு http://vsanthamullai.blogspot.in/
                                                                        






  


      யாரையும் சோகப்படுத்தணும்னு  இதை எழுதலை. பிரிந்து 1 மாதம் ஆகியும், இன்னும் இங்கேயே இருக்கிற உணர்வை கொடுத்துக் கொண்டு,  நம்பமுடியாத அதிசயமாய் வாழ்ந்த அஷ்வத்தின் அம்மா, அப்பாக்கு இதை படிப்பதால் நிறைவு ஏற்படுகிறது.  அவர்களுக்கு சமர்ப்பணம் இது.

     குறும்புக்கார குழந்தையாய் எல்லோரையும் கவர்ந்தவனை, கேன்சர் எப்படி அப்படி பொறுப்பான பிள்ளையாய் மாற்றியதோ?

    அவனுக்கு முதன் முதலில் வலி தீவிரமாக ஆரம்பித்தது, அவனின் உபநயனத்தன்று.  ஏதோ கால் குடைச்சல் வலி என்றே அனைவரும் நம்பிக்கொண்டு மெத்தனமாக இருந்து விட்டோம்
. இன்று வீடியோவில் அவன் முகத்தைப் பார்த்தால் தெரிகிறது அவன் பட்ட அவஸ்தை.

     ஸ்மார்ட் போன் வைத்திருக்கிற 18 வயசு பையனுக்கு internet உபயத்தில் நன்றாக தெரியும் தன் நோயைப் பற்றியும், அதன் தீவிரம் பற்றியும். இருந்தாலும், ஒரு நாள் கூட சிடுசிடு என்றோ,  கோபம்,  ஆத்திரம்,  அழுகை எதுவும் இல்லாமல்,  உடம்பு வலி,  மன வலி,  பெற்றோர்கள் படும் அவஸ்தை,  வெளியில் போக முடியாமை,  விளையாட முடியாமை,  அவனுக்கு மிகவும் பிடித்த சைக்கிள் விட முடியாமை....இப்படி எத்தனை கஷ்டங்களை அவன் தாங்கினான்.


        ஒவ்வொரு முறையும்  டாக்டரோ , நர்ஸோ மருந்து கொடுத்தாலோ அல்லது ஊசி போட்டாலோ  அதன் பெயர், எதற்கு போடுகிறார்கள்,  அதனால் என்ன நன்மை என்று ஒவ்வொரு முறையும் கேட்டுவிட்டுத்தான் போட அனுமதிப்பான்.

     சென்னை வெள்ளத்தின் போது அவனுக்கு க்ளைமேட்டால் வீசிங் - மூச்சுத்
திணறல் அதிகரித்து விட்டது.  இருந்தாலும் தன் நண்பர்களுடன் சென்று உதவி செய்ய முடியவில்லையே என்று தான் கவலைப்பட்டான்.

     பெற்றோர்களுக்கும் அவன் நிலைமை புரிந்தாலும், கடவுள் எதாவது அதிசயம் நிகழ்த்தி காப்பாற்றுவார் என்றே நம்பிக் கொண்டிருந்தனர். Immune
அதிகரிக்க எத்தனை வித விதமான காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்புகள் கலந்து அவனுக்கு ஜூஸ் கொடுப்பார்கள். அந்த கஷ்டத்திலும் அவன் அம்மாவை கிண்டலடிப்பான் - 'சும்மா சொல்லு பட்டு, என்னென்ன போட்டு அரைச்சிருக்க இதல? நான் கண்டு பிடித்து விடுவேன் இருந்தாலும் நீயே சொல்லு' என்று.
    

    ஒரு கோவில்,  ஒரு  தான தர்மம், ஒரு ஹோமம் விடவில்லை அவர்கள்.  அத்தனை துயரத்திலும் வீடே அவ்வளவு மங்களகரமாக இருந்தது.
    
      எத்தனை மணி ஆனாலும் அவன் வாய்க்கு பிடிப்பதை செய்து போட அம்மா, வாங்கி வர அப்பா. கடைசி கடைசில ஒரு நாள் பாதி  இரவுக்கு மேல் , fanta குடிக்கணும் போலிருந்தது அவனுக்கு.  இவர்கள் எங்கெங்கோ அலைந்து  ரொம்ப தூரம் சென்று திறந்திருந்த கடையிலிருந்து வாங்கி வந்தார்கள்.  ஒரு வாய் குடித்துவிட்டு அவன் சொன்னது "அப்படியே திருப்பதி பெருமாளைப் பார்க்கிற மாதிரி இருக்கு பட்டு". பட்டுங்கறது அவன் அம்மாவை கடைசி நாட்களில் அழைத்த பெயர்.

      ஒரு நாள் யாரையாவது பார்க்க ஆஸ்பத்திரி போனால் கூட , எப்படா வீட்டுக்கு போவோம்னு இருக்கு நமக்கு.  ஒன்றரை வருடமா அந்த குடும்பம் பட்டதே கஷ்டம், அப்பப்பா. ஒவ்வொரு தடவை டெஸ்ட் ரிசல்டின் போதும்
துளித் துளியாக துடித்தார்கள்.  அவர்கள் மட்டுமின்றி அத்தனை சொந்தங்களுக்கும் அதே நிலை தான்.

       வட இந்தியாவில் எதாவது பரிட்சை, இன்டர்வ்யூ அல்லது ஊருக்குப் போகும் போது தயிர்+சக்கரை கொடுத்து அனுப்பி வைப்பார்கள். எங்க அஷ்வத் நாராயணனிடம் போவதற்கு முன் அவன் அம்மா கையால் லஸ்ஸி சாப்பிட்டு விட்டுப் போனான். போவதற்கு 2 நாட்கள் முன் அவன் அப்பா, அம்மாவிடம் சொன்னது - 'நாளைக்கு நான் ICU ல ஷிஃப்ட் ஆயிடுவேன். நீங்க சும்மா அழக் கூடாது' என்பதே.

   

     பெரியாழ்வாரே, தன்னுடைய பெரியாழ்வார் திருமொழி 4ம்பத்து,10ம் திருமொழியில் 10 பாட்டிலும்,


        "எய்ப்பென்னை வந்து நலியும்போதங்கேதும் நானுன்னை

            நினைக்க மாட்டேன், அப்போதைக்கிப்போதே சொல்லி

                  வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளி யானே !"


     என்று,  உலக வாழ்க்கையை துறக்கும் போது கடவுளை நினைக்க முடியாது, அதனால் இப்போதே சொல்லி வைக்கிறேன், என்னை உன்னடியில் சேர்த்துக் கொள் என்கிறார்.

     தேவப்பெருமாளும், 6 வார்த்தைகளில், திருக்கச்சி நம்பிகள் மூலம் இராமானுஜருக்கு சொன்னதும்,  அந்திம காலத்தில் கடவுளை நம்மால் நினைக்க முடியாவிட்டால் கூட அவன் நம்மை ரக்ஷிப்பான் என்பதே.  வராஹப் பெருமானும் பூமி தேவிக்கு இதே உத்தரவாதம் தான் அளித்திருக்கிறார்.

     ஆனால் எங்க அஷ்வத் கடைசியில் CCU வில் இருக்கும்போது,  ஸ்ரீசுக்தம் மற்றும் த்வய மந்திரம் காதில் கேட்டுக்கொண்டு, பெருமாள் தீர்த்தம் -துளசி சேர்த்துக் கொண்டு, மற்றும் ஆசாரியன்  தானே அவனுக்காக பண்ணிக்கொண்டு அளித்த ப்ரபத்தி-சரணாகதியின் பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு மோக்ஷம் சென்றிருக்கிறான்.

    இன்னமும் பள்ளி ஆசிரியர்களிலிருந்து ,கல்லூரி HOD வரை மற்றும் அனைத்து நண்பர்களும் அவர்கள் வீட்டுக்கு வந்த வண்ணமே இருக்கின்றனர். இன்றும் அவன் தோழர்கள் முன்பு போலவே அவன் வீட்டிற்கு வந்து, அஷ்வத்தின் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிச் செல்கின்றனர். அவர்களுக்கு போன் பண்ணிக் கொண்டும் இருக்கிறார்கள்.

     அவன் பிரிந்து 1 மாதத்திற்று மேலே ஆனாலும், தினமும் காலையில்  பாலை ஆற்றி வைப்பது முதல் - மதியம் & இரவு உணவில் அவனுக்குப் பிடித்ததை சமைத்து அவனுக்கு படைத்துவிட்டு பிறகு உண்பது வரை அவனுடனே கழிகிறது அவர்களின் பொழுது. எங்களைப் பொருத்தவரை அவன் இங்கேயே எங்களுடன் எங்கள் மனங்களில் தான் இருக்கிறான்.

      பஞ்ச தத்துவத்தால் ஆன அஷ்வத்தின் உடலை வேண்டுமானால்,  நம்மால் காண இயலாது.  ஆனால் ஆறாவது தத்துவமான நம் மனதால் அவனை ஸ்பரிசிக்க முடியும்.


     அவனுடைய Facebook Status -

    'A few bad chapters does not mean that your story is over, it just means that very soon....its going to be an EPIC

 NEVER. GIVE. UP !'

   கரெக்ட் தான். அவன் வரலாறு மற்றுமின்றி இதிகாசமாகவும் ஆகி விட்டான். அவனே அவன் பெற்றோர்களை தெய்வமாக இருந்து பார்த்துக் கொள்ளட்டும்.








Thursday 21 January 2016

            சமர்ப்பணம்..... 

 

     


       எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னு புரியல..

 5,6 வயசுல பாவாடை சட்டையோட இருக்கும்போதே கைக்குழந்தைகளை தூக்கி  கொஞ்சுபவள் அவள்.  சதா குட்டிப் பசங்களோட விளையாடுபவள்.  அவளுக்குன்னு ஒரு குழந்தை வந்தால் எப்படி இருந்திருப்பாள்... 


      நல்ல கணவன், மாமியார், நாத்தனார், மைத்துனர்னு அன்பான மாமியார் வீடு. அவளைத் தெரிந்தவர்கள், அவளுடன் பேசியவர்கள் அவள் சிரித்த முகத்தை மறக்கவே மாட்டார்கள். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு இடத்திலும் செல்லம் அவள்.


    பிரசவத்துல ரொம்ப கஷ்டப்பட்டுத் தான் பையனை பெற்றெடுத்தாள்.  . மொத்த குடும்பத்திற்கும் அவன் சொல்றது வேதம்.  அவன் வைத்தது சட்டம்.  செல்லமா வளர்த்தா கூட சமத்தாவே வளர்ந்தது குழந்தை.  அவ்வளவு துறுப்பான அறிவான குழந்தை அவன். அவள் உலகமே அவன் தான்.  அவளுக்கு மட்டுமின்றி மொத்த குடும்பத்தின் கண்மணியானான் அவன். அவன் என்ன சொன்னாலும் கேட்பார்கள்.

    10 வது முடித்து நல்ல மார்க் வாங்கியிருந்தும்,  மேத்ஸ், சயன்ஸ்னா 12th ல  entrance exam, அட்மிஷன்னு குழந்தை கஷ்டப்படும்னு காமர்ஸ் படிக்க வைத்த அப்பா அம்மா.
  
       12வதில்  நல்ல மார்க் வாங்கியதால்  அவங்க ஊர்ல சிறந்த கல்லூரி ஒன்றில் அவனுக்கு இடம் கிடைத்தது .  கல்லூரி திறக்க சில நாட்களே இருந்தது.

   12வது பரிட்சை முடிந்ததும் அவன் ஜிம்முக்கு போக ஆரம்பித்தான். சைக்கிளிலும் வீலிங் செய்பவன். சந்தோஷமா போயிட்டிருந்த வாழ்வில் திரும்ப முடியாத திருப்ப முடியாத திருப்பம் வந்தது. 


     திடீரென்று  ஒரு நாள் தொடையில் வலிக்க ஆரம்பித்தது அவனுக்கு. மருந்து தடவி,  ஒத்தடம் கொடுத்தும் வலி குறையாததால் டாக்டரிடம் போனார்கள்.

டாக்டர் இவர்களிடமே கேள்விகள் கேட்டு ஜிம் போவதால் தசை வலி என்று முடிவு கட்டி மருந்து,  ஊசி என்று muscle pain க்கு ட்ரீட்மென்ட் கொடுத்தார்.

      இப்படியே 2 மாதம் ஓடியும் வலி அதிகரித்ததேயன்றி குறையவில்லை. டாக்டருக்கும் சந்தேகம் வந்து ct scan எடுக்க சொன்னார். ..

    விழப்போகும் இடியைப்பற்றி எந்த அறிகுறியும் இல்லாமல், அப்பாவும் அம்மாவும் பையனுடன் டாக்டரைப் பார்க்க போனார்கள். எலும்பு முறிவு அல்லது தசையில் எதாவது பிரச்னை இருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் ரிசல்டில் Metastatic Osteosarcoma என்று வந்திருந்தது. டீன் ஏஜ் வரை குழந்தைகளுக்கு குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு வரும் bone cancer. வாழ்க்கையே முடிவுக்கு வந்த நிலையில் இருந்த பெற்றோர்களை,  அன்று வரை குழந்தையாய் இருந்த 18 வயது பையன்,  தோள் தாங்கி வீட்டுக்கு அழைத்து வந்தான்.

  அதிர்ச்சியில் இருந்து மீண்டு,  சிகிச்சை ஆரம்பித்தார்கள்.  அவனுக்கு  4 chemo கொடுத்து, சிறந்த மருத்துவமனையில் இந்தியாவின் தலைசிறந்த   orthopedic oncologist surgeon  அவன் தொடை எலும்பை நீக்கிவிட்டு, செயற்கை எலும்பு பொருத்தினார்.

     எல்லா டீன் ஏஜ் குழந்தை போல அவன் கவலை கீமோவில் போன முடி வருமா என்பதே. கீமோ முடிந்ததுமே முடி வந்துவிட்டது.

     ஆபரேஷன் முடிந்து, மீதி 4 chemo மற்றும் physio therapy யும் முடிந்து அவன் அம்மா உதவியுடன் கல்லூரி போக ஆரம்பித்தான்.

     இது நடுவில் கல்லூரி வர இயலாததை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்ததும் அவர்கள் முழு ஒத்துழைப்பும் தந்தார்கள். அவன் பூரண குணமானதும் கல்லூரி வரலாம்  என்றும் , 2 செமஸ்டர் பரிட்சையையும் சேர்த்து எழுதவும் அனுமதி தந்தார்கள். 

    10 மாதம்  பட்ட கஷ்டம் மறந்து கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்தான். அம்மாவின் உதவியுடன் சில நாட்கள் ஆட்டோவில் போனாலும், பிறகு பஸ்ஸிலேயே போக ஆரம்பித்தான். டிரைவர் கண்டக்டர்கள் பஸ்ஸை காலேஜ் வாசலில் நிறுத்தினாலும், மறுத்துவிட்டு பஸ் ஸ்டா
ப்பில் இறங்கி தான் செல்வான். கல்லூரியே அவனைப் பார்த்து ஆச்சரியப் பட்டது.  துளி தன்னிரக்கம், வெறுப்பு எதுவும் இல்லாமல் அவ்வளவு உயிர்ப்புடன் , ஊன்றுகோல் உதவியுடன் கம்பீரம் குறைவில்லாமல் வலம் வந்தான்.

     ஒருமாதம் தான் கல்லூரி போனான் . அதற்குள் திடீரென்று அவனுக்கு மூச்சத் திணறல்,  ஜுரம் வந்தது. மறுபடி lungs ct scan எடுத்ததில் 2 lungs பூராவும் கேன்சர் இருந்தது தெரிய வந்தது. முதல் இடியாவது தேவலாம் ஏதோ தேறிடுவான்னு நம்பிக்கைல நாளை ஓட்டின குடும்பம்,  இந்த அதிர்ச்சியில் நிலை குலைந்தது.

   காலேஜ் போன 1 மாசத்தின் சுகமான நினைவுகளின் உதவியால் வலி, வேதனை, சோகம், தன்னிரக்கம் எல்லாத்தையும் அந்த குழந்தை முழுங்கி விட்டு அடுத்த யுத்தத்துக்கு தயாரானது.

    திரும்பவும் முதலிலிருந்து கீமோ, ஆபரேஷன் கீமோ...  ஆண்டிபயாடிக் 4 நாள் சாப்பிட்டாலே வயிறெரிச்சல் நம்மால் தாங்க முடியாது. சின்னப்ப அமிர்தாஞ்சன் தடவினாலே எரியுதுன்னு ஊரை கூட்டும் அந்தக் குழந்தை, 14 கீமோ 2 major ஆபரேஷனை,  ஒரு சொட்டு கண்ணீரோ முகச்சுளிப்போ இல்லாம தாங்கித்து.

     ஒன்றரை வருஷத்துல 18 வயசுலிருந்து 81 வயதுக்கான முதிர்ச்சி அவன் பேச்சில்,  நடத்தையில். அத்தனை உறவினர்களிடமும் அவ்வளவு அன்பு, கரிசனம். யாரைப் பார்த்தாலும் Thumps-up சிக்னலும் சிரிப்பும் தான் அவன் முகத்தில். தான் படற வேதனையை விட, அப்பா அம்மாவின் பயம் கலந்த வேதனையை தாங்க முடியவில்லை அவனால். தான் இல்லாமல் போகும்போது,அவர்கள் எப்படி தாங்குவார்கள் என்ற ஒரு கவலை தான் அவனுக்கு.

     கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லாத அவன், கடைசி நாட்களில் கேட்டது ms அம்மாவின் குறையொன்றுமில்லை தான். குறிப்பால் அவன் பெற்றோர்களுக்கு அவனுக்கு ஒரு குறையும் அவர்கள் வைக்கவில்லை என்று உணர்த்தியதாக இன்று நம்புகிறார்கள்.

     கடைசி கீமோ மட்டும் பாக்கி இருந்தது. இனி இது முடிந்து  வேறு ட்ரீட்மென்ட், கீமோ கிடையாதுங்கற சந்தோஷத்துடன் இருந்தார்கள்.

   ஹாஸ்பிடலில் இருந்து வந்த  2 நாளில் ஆரம்பித்த வயிற்றுப் போக்கு நிக்கவேயில்லை.

எந்த உணவும் அவனால் சாப்பிடவும் முடியவில்லை. திரும்பவும் ஆஸ்பத்திரி மருந்து ஊசி டெஸ்ட்...10 நாள் ஒண்ணும் சாப்பிடாம இருந்து இன்பெக்ஷன் குணமாகி கொஞ்சம் சூப்பும் , தயிரும் சாப்பிட்டான்...

    அத்தோட சரி. அதுக்கப்புறம் நடந்தத எழுத எனக்கு தெம்பில்ல..

     அவன் தன்னோட அம்மாக்கு 18 வயசுல குழந்தையாய் மறுபடி பிறந்து, எல்லா உபசாரமும், சேவையும் அவளிடம் பெற்று , ஒன்றரை வருஷத்துல ஓராயிரம் ஆண்டு வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்து விட்டு ஏமாற்றி விட்டு ஓடி ஒளிந்து விட்டான்.

     யார் அவன் முன்னாடி அழுதாலும் அவனுக்குப் பிடிக்காது. அவர்களை அறையை விட்டு போகச் சொல்லி விடுவான். கடைசியில் அவன் கேட்டதை செய்து தரும் அம்மா செய்த எதுவும் நாக்குக்கு ருசிக்க வில்லை. அம்மாவை தொந்தரவு செய்வதை தாங்க முடியாமல் அவளிடம் "நான் ஒரு நிமிஷம் அழட்டுமாம்மா"னு  பர்மிஷன் வாங்கி அவள் தோளில் சாய்ந்து 1 நிமிடம் அழுதது தான் அவன் இந்த கேன்சருடனான யுத்தத்தில் மனம் தளர்ந்தது.

     மற்றபடி உயர்த்திய கட்டை விரலுடனும்,வாக்கிங் ஸ்டிக்குடனும் அவன் போராட தயங்கவே இல்லை. கேன்சரால் அவன் உடலைத் தான் அழிக்க முடிந்தது. அவன் ஆத்மாவை, மனதை, தைரியத்தை நெருங்க கூட முடியவில்லை அந்த நண்டால்.

   கடைசியில் பேச தெம்பில்லாமல் போன போது, அவன் அம்மாவிடம்  கைவிரல்களை குவித்து உன் வாய்  குவிந்திருக்கக் கூடாது என்றும், பின் விரல்களை விரித்து சிரிப்பால் எப்பவும் மலர்ந்திருக்க வேண்டும் என்று சைகையால் தெரிவித்ததை சொல்லி, சொல்லி கதறும் அவளுக்கு என்ன பதில் சொல்வது ... 

என்றும் எங்களுடன் எங்கள் தைரியமாய், நம்பிக்கையாய் வாழப்போகும்

அஷ்வத்துக்கு சமர்ப்பணம்...