Monday 3 April 2017

                                                     சித்திரகூடம்
                                 CHITRAKOOT
                                    


   வனவாசகோலத்தில் ராமர்,லக்ஷ்மணர்,பரதர்


 

"தொத்தலர்பூஞ் சுரிகுழல் கைகேசி சொல்லாதொன்னகரந் துரந்து துறைக் கங்கைதன்னை பத்தியுடைக் குகன் கடத்த வனம்போய்ப் புக்குப் பரதனுக்கு பாதுகமுமரசு மீந்து சித்திரகூடத்திருந்தான் றன்னை யின்று தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருநிலத்தார்க் கிமையவர் நே ரொவ்வார் தாமே "! குலசேகராழ்வார். 

                      

மத்தியப்பிரதேசம் ஒரு சமத்துவமான பிரதேசம். எல்லாவிதமான  இனம்,மொழி,கலாசாரம் கலந்து சிறிய பாரதமான மாநிலம்.

ஏராளமாக கொட்டிக்கிடக்கும் இயற்கையின் அற்புதங்கள், பழம்பெரும் கட்டிடங்கள், வனவிலங்கு சரணாலயம் என்று பார்க்க ஏராளம் உள்ளது. வரலாற்று சிறப்பு மற்றும் இதிகாசத்தில் இடம்பெற்ற இடங்கள் நிறைந்த மாநிலம்.

நாங்கள் தரிசிக்க சென்ற இடம், இராமாயணத்தில், இராமர் சந்தோஷமாக சீதை லக்ஷ்மணனுடன் கழித்த இடமான சித்ரகூடம். இராம, லக்ஷ்மணர், சீதை 14 வருட வனவாசத்தில் 11 வருடம் இந்த பகுதிகளில் தான் கழித்தனர் என்றும் சொல்லப்படுகிறது


 முதன் முதலில் வால்மீகி ராமாயணத்தில் தான் சித்ரகூடம் என்ற பெயர் வருகிறது. பரத்வாஜர், காளிதாசர் போன்றோரும் இந்த இடத்தை குறிப்பிட்டுள்ளனர். நம் குலசேகராழ்வாரும் பெருமாள் திருமொழியில் பாடியுள்ளார். அதன்படி திவ்யதேசம் இது.


சித்ரகூடம், எங்க ஊர் ஜபல்பூரிலிருந்து சுமார் 239 கிமீ தூரத்தில் உள்ளது. அதிகாலை காரில் கிளம்பி , 3 மணி சுமாருக்கு சித்ரகூடம் போய்ச் சேர்ந்தோம்.


அன்று மாலை
'RAAM GHAT' ராம் காட் என்ற இடத்தை அடைந்தோம். அது ராமரும் பரதனும் சந்தித்த மந்தாகினி நதிக்கரை. இது கங்கை இல்லை,வேறு மந்தாகினி ஆறு. ஊரைச்சுற்றி ஓடுகிறது ஆறு.
                                                               


                                                 ராம்காட் ஆரத்தி
 

இந்த நதியின் ஒரு படித்துறை மத்தியப்பிரதேசம், பக்கத்து  துறை உத்திரப்பிரதேசம்.
 

அங்கு உள்ள ஷிகாரா எனப்படும் படகுகளில் பேரம் பேசி ஏறி அமர்ந்து கொண்டால், நதியின் இரண்டு பக்கமும் உள்ள படித்துறைகளில் இருக்கும் கோயில்களுக்கும், முக்கியத்துவம் உள்ள இடங்களுக்கும் செல்லலாம். மொத்த படகு சவாரியும் 1 கிலோ மீ கூட இருக்காது. ஆனால் இறங்கி பார்க்க வேண்டிய இடங்கள் பல.

                                           
ஷிகாரா படகுகள்
      
 கஷ்மீரி படகு மாதிரி sofa ,விளக்கெல்லாம் போட்டு, ஜம்முனு இருக்கும் படகு சவாரி. முதலில் நாங்கள் சென்றது துளசி தாஸ் ராமசரிதமானஸ் எழுதிய இடம். இராமாயணம் எழுத ஆரம்பிக்கும் முன் இராமர், சீதை, லக்ஷ்மணனுடன் அவருக்கு காட்சி தந்து, ஆசிர்வதித்ததாக ஐதீகம் .

                    
                                                               
                                                                     
       துளசிதாசர் ராமசரிதமானஸ் எழுதிய இடம்
    
மாலை 6 மணிக்கு மேல் நடக்கும் ஆரத்தியை படகிலிருந்தே பார்க்கலாம்.

 ராமர் தசரதருக்கு ச்ராத்தம் செய்த இடமும் இங்குள்ளது.  இவைகள்  தவிர நிறைய கோயில்கள் உள்ளன.
 
அடுத்து சென்றது ஜானகி குண்ட் JANAKI KUND என்ற சீதா தேவி ஸ்நானம் செய்த இடம். அதுவும் மந்தாகினி நதி தான். ரோடு வழியாகவே செல்லலாம் அல்லது படகிலும் வந்து பார்க்கலாம்.
 
பிறகு தரிசித்தது SPATIKA SHILA ஸ்படிக ஷிலா  எனப்படும் வழவழப்பான பாறை. இங்கு தான் இராமரும் சீதையும் உட்கார்ந்து சித்ரகூடத்தையும், மந்தாகினியையும் ரசித்தது. மிகவும் ரம்மியமான இடம். இந்த பாறையில் தான் காகாசுர வதமும் நடந்தது.  இராமர் சீதையின் பாதங்கள் இங்கு உள்ளன.
                                                             

                                              ஸ்படிகஷிலா
                                               
துளசி தாஸரின் 'ராம் சரித மானசி'ன் படி, ஹனுமான் லங்காவில்  சீதா தேவியை தரிசித்து விட்டு வரும்பொழுது, ராமர் இந்த பாறையில் தான் அமர்ந்திருந்தார்.
 
இதன் அருகிலேயே மியூசியம் உள்ளது. அவசியம் பார்க்க வேண்டிய இடம்.
 
இதை அடுத்து இங்கிருந்து 16-17 கி.மீ தூரம் உள்ள சதி அனுசுயா ஆஸ்ரமம் சென்றோம். அத்ரி முனிவர் அனுசுயா தன் குழந்தைகளான பிரம்ஹா, விஷ்ணு, சிவனுடன் வசித்த இடம் இது. மந்தாகினி நதிக் கரையிலேயே உள்ளது.
 
                                                        
                                    அத்ரி அனுசுயா ஆஸ்ரமம்
                           
முன்னொருகாலத்தில் 10 வருடங்கள் மழையே இல்லாமல் இருந்ததாம். கடும் பஞ்சம், வறட்சி நிலவியதாம். அப்பொழுது சதி அனுஸுயா தன் தவத்தால் மந்தாகினி நதியை பூமிக்கு வரவழைத்தாராம். அதன் பிறகு தான் இவ்வளவு மரங்களும் வளர்ந்து செழித்து வனமானதாம்.
 
பக்ஷிகளின் ஒலியும் மந்தாகினி நதியும் நெடிந்து வளர்ந்த மரங்களும் மலைகளுமாக, நம்மை திரும்ப விடாமல் ஈர்க்கின்றன. இப்படி ஒரு ஆஸ்ரமம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சன்யாசி ஆகிவிடலாம் !
 
ராமர் சீதை லக்ஷ்மணர் சித்ரகூடத்திலிருந்து தண்டகாரண்யம் செல்லும்பொழுது அத்ரி முனிவரையும் அனுசுயா தேவியையும் தரிசித்து விட்டு சென்றதாக வால்மீகி ராமாயணம் சொல்கிறது. இங்கிருந்து தண்டகாரண்யம் ஆரம்பிக்கிறது. 

இங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது 'குப்த் கோதாவரி ' GUPT GODAVARI' என்னும் குகைக்குள் ஓடும் நதி  ! கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு அற்புதம் ! குகைகளின் உள்ளே, முழங்கால் அல்லது முட்டி வரைக்கும் கூட ஓடும் நீர்களின் வழியே நடந்து சென்று வரும் அனுபவம். இங்கும் ராம லக்ஷ்மணர்கள் அமர்ந்து இருந்ததாக சொல்லப்படுகிறது ! 

மாலையில் காமத்திகிரி 'KAAMAD GIRI' என்னும் சித்ரகூடத்தின் ஸ்தல நாயகரான காம்தா நாத் 'KAAMTA NAATH' பெருமாளை சேவிக்க சென்றோம் ! அந்த ஊர் மக்களின் கூற்றுப்படி, ராமர் சித்ரக்கூடத்தை விட்டு புறப்படும்பொழுது, காமத் கிரி என்னும் குன்று நிரம்ப வருத்தப்பட்டதாகவும், அவரை போக விடாமல் தடுத்ததாகவும், ராமர் தனது சக்தி எல்லாம் ஒன்று திரட்டி ஒரு விக்கிரஹம் செய்து, தனக்கு பதிலாக வழிபடுமாறு கூறி , அந்த குன்றிடம் கொடுத்ததாக வரலாறு. 
  
                   

 
                                                     காம்தா நாத்              

KAMTANATH  பகவான் கண்ணாலேயே நம்மை  ஈர்க்கின்றார் . அவரை சேவித்து  விட்டு வழக்கமாக எல்லோரும் செய்யும் 8 கிலோ மீட்டர் கிரி பிரதக்ஷணம் செய்தோம்.  அவரது பெயருக்கு ஏற்ப நாம் விரும்பும் அனைத்தையும் கொடுக்கும் தெய்வமாக காமத் நாதர் இருக்கிறார் !
  

                                       
               காம்தாநாத் கோயில்
                                                            
கிரி பிரதக்ஷணம் வரும்பொழுதே ராமரும் பரதரும் சந்தித்த 'BHARAT MILAP' என்ற இடம் இருக்கிறது ! இப்போது கோயிலாக உள்ளது ! அவர்களின் திருவடிகளும் உள்ளன .

 இவை தவிர புதுசு புதுசாக மலை மேல் ஹனுமத் தாரா நீர் வீழ்ச்சி மற்றும் கோயில், பரதர் எல்லா புனித நாடிகளின் நீரை சேர்த்து வைத்திருந்த 'பாரத் கூப்' என்ற இடம், மேலும் பல கோயில்களும் உள்ளன.


 இரண்டு நாட்கள் தங்கி இருந்து பார்க்க வேண்டிய இடம். நல்ல ஹோட்டல்கள் உள்ளன. தமிழ்நாட்டு உணவு என்றால் இட்லி தோசை மட்டுமே கிடைக்கும். நார்த் இந்தியன் உணவு தான்  பிரதானம். சிறிய ஹோட்டல்கள் அவ்வளவு சுத்தமாக இருக்காது ! வெளியில் தள்ளு வண்டிகளில், கட் செய்த பழங்கள்  சாப்பிடாமல் இருப்பது நல்லது ! போக்கு வரதுக்கு பஸ், ஆட்டோ, டாக்ஸி எல்லாம் குறைந்த விலையிலேயே கிடைக்கும். சிறிய  TOWN தான்.

 திரும்பி வர மனமில்லாமல் தண்டகாரண்யத்தையும் சித்ரக்கூடத்தையும் விட்டு விட்டு, மனதில் ராம லக்ஷ்மண சீதையுடன் ஊருக்கு வந்தோம் !